அட அரை போதை ஆப்பாயில்களா.. காதலிக்கும் பெண்ணின் அப்பான்னு அடுத்த வீட்டுக்காரரை வெட்டிட்டீங்களே..!
ஒரு தலை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதலியின் தந்தை பைக் சாவியை பறித்துக் கொண்டு விரட்டிய நிலையில், பழிக்கு பழி வாங்குவதாக கூறி கஞ்சா போதையில் காதலியின் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
பார்ப்பதற்கு சிலிர்த்துக் கொண்ட கீரி போன்ற சிகை அலங்காரத்துடன் இருக்கும் இவர் தான், விரும்பாத பெண்ணை விரட்டி விரட்டி காதலித்து தற்போது கொலை வழக்கில் சிக்கி இருக்கும் முத்தழகன்..!
மதுரை மாநகராட்சி மேயரின் வீடு உள்ள யோகனந்தசுவாமி மடம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பொங்குடி மாயாண்டி. இவரது மனைவி பாண்டியம்மாள் . இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்த போது கையில் ஆயுதங்களுடன் வந்த இளைஞர் ஒருவர் பொங்குடி மாயாண்டியை சரமாரியாக வெட்டி உள்ளார். அவரை தொடர்ந்து வந்த மற்றொரு இளைஞரோ ஆளை மாத்திட்டியடா... என்று கூறியபடி விடாத... யாரா இருந்தாலும் போடு.. என்று வெட்டிகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக பாண்டியம்மாள் போலீசில் புகார் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார் பொங்குடி மாயாண்டியின் சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்தப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அக்கம்பக்கத்து வீட்டார் கொடுத்த தகவலின் பேரில் மதுரை HMS காலனி ஆனந்தம் நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரான முத்தழகனையும், அவனது கஞ்சாகுடிக்கி கூட்டாளியான 17 வயது சிறுவனையும் தட்டித்தூக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாங்கள் வேறு நபருக்கு குறிவைத்து சென்றதாகவும், ஆளை மாற்றி வெட்டிவிட்டதாகவும் கூறி உள்ளனர்.
பொங்குடி மாயாண்டி வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருவதாகவும், அந்தப்பெண்ணை பைக்கில் விரட்டிச்சென்ற முத்தழகன் காதலிக்க சொல்லி டார்ச்சர் செய்ததாகவும் கூறப்படுகின்றது. அந்தப்பெண் தனது தந்தையிடம் கூறிய நிலையில் அவரது தந்தை தனது உறவுக்கார இளைஞருடன் சேர்ந்து முத்தழகனை பைக்குடன் மடக்கிபிடித்து, பைக் சாவியை பறித்துக் கொண்டு, நடந்து போ என்று எச்சரித்து விரட்டியுள்ளார்.
இதனால் அசிங்கபட்ட முத்தழகன் அவரை பழிக்கு பழிவாங்க திட்டமிட்டு மது மற்றும் கஞ்சா போதையில் 17 வயது கூட்டாளியுடன் அந்த பெண்ணின் வீடு தேடி சென்றுள்ளான். கூட்டாளியை ஏவி வீட்டில் அந்த ஆள் இருக்கிறானா பார் ? என்று அனுப்பிய நிலையில் , பொங்குடி மாயண்டியை அந்தப்பெண்ணின் தந்தை என்று தவறாக நினைத்த அரை போதியில் இருந்த 17 வயது கூட்டாளி, அவரை சரமாரியாக வெட்டி உள்ளான். பின்னால் வந்த முத்தழகன் ஆள் மாறிபோனது தெரிந்தும், அதனை தடுக்காமல், அவர் உயிரோடு இருந்தால் நம்மை காட்டிக் கொடுத்து விடுவார் என்று கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போதையில் ஆள்மாறி கொலை செய்த இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 17 வயது சிறுவனை சிறுவர் சீர்த்த பள்ளியிலும், முத்தழகனை சிறையிலும் அடைத்தனர். கண்மண் தெரியாத காதலும் .. நிலை கொள்ளா போதையும் எங்கு கொண்டு வந்து நிறுத்தும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!
Comments