கையில் தடியோடு திரண்ட 23 கிராம மக்கள்....! தீப்பந்தங்களை வீசிக் கொண்ட விநோத திருவிழா...!!
ஆந்திராவில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு நடத்திய தடியடி திருவிழாவில், ஒருவர் மீது ஒருவர் தீப்பந்தங்களை வீசியும், தடியால் தாக்கிக் கொண்டதில் சுமார் 100 பேர் காயமடைந்தனர். மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் நிகழ்ச்சியை வேடிக்கை பார்க்க வந்திருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் தூக்கி எறிந்தும், தடியால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதும், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறுவதும் கலவரக் காட்சிகள் அல்ல.. ஆந்திராவில் பொதுமக்களே அரங்கேற்றிய திருவிழா காட்சிகள் தான் இவை..
கர்னூல் மாவட்டத்தின் தேவரகட்டு மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயில். விஜயதசமி நாளன்று இரவில் நடைபெறும் கல்யாண உற்சவத்திற்குப் பிறகு உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்த பகுதியில் 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, தங்களுக்குள் தடியடி நடத்தி மோதி கொள்வது வழக்கம். இதில் வெற்றிபெறும் குழுவை சேர்ந்தவர்கள் உற்சவ மூர்த்தியை எடுத்து செல்வது அவர்களின் பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவில், ஏராளமானவர்களுக்கு காயம் ஏற்படுவதால், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது காவல்துறை. ஆனாலும், பராம்பரியமாக நடைபெறும் விழாவை கைவிட கிராம மக்கள் மறுத்து விட்டதால், விழாவிற்கு போலீசார் தடை விதித்தனர்.
ஆனால், இந்த ஆண்டும் தடையை மீறி, தேவரகட்டு மலையைச் சுற்றியுள்ள 23 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து வழக்கமான நடைமுறையின் படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தீப்பந்தங்களை மாறி மாறி வீசிக்கொண்ட காட்சிகள் பார்ப்பவர்களுக்கு போர்க்களத்தை நினைவூட்டின. இந்த தாக்குதல் திருவிழாவை தடுக்க முயன்ற போலீஸார் தள்ளுமுள்ளுவில் கீழே விழ அவர்களை பொதுமக்கள் மீட்கும் நிலை ஏற்பட்டது.
இந்த வினோத தாக்குதலில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைக்காயம் மற்றும் தீக்காயத்துடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தடியடி விழாவை ஆர்வத்துடன் மரத்தில் அமர்ந்தபடி பலர் பார்த்துவந்த நிலையில், மரக்கிளை முறிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சோகமும் விழாவில் அரங்கேறியது.
Comments