ரூ. 25,000 பெர்மிட்டிற்கு ரூ. 5 லட்சம் வசூல்..! கொந்தளிக்கும் ஆம்னி உரிமையாளர்கள்!!
25 ஆயிரம் ரூபாயில் முடிய வேண்டிய ஆம்னி பேருந்துக்கான பர்மிட்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டியிருப்பதால் வெளி மாநிலங்களில் பேருந்துகளை பதிவு செய்து தமிழகத்தில் இயக்கி வருவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் என்றால் டி.என். என்று நம்பர் பிளேட் இருக்கும். ஆனால், என்.எல்., ஏ.ஆர்., போன்ற வட கிழக்கு மாநிலங்களின் நம்பர் பிளேட்டுகளுடன் வலம் வரும் இந்த பேருந்துகளும் தமிழகத்தில் இயங்குகின்றன.
இந்த வகையில் 700 பேருந்துகள் இயங்குவதாக கூறுகின்றது, தமிழக ஆம்னி பேருந்துகள் சங்கம். அண்மையில் பண்டிகை காலத்தின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக போக்குவரத்து அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளான சுமார் 120 பேருந்துகளில், 110-க்கும் மேற்பட்டவை என்.எல். என்ற நாகலாந்து பதிவெண் கொண்டவை என்கின்றனர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்.
அதிகாரிகளின் நடவடிக்கைக்குக் காரணம், கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பது அல்ல என்றும் வட கிழக்கு மாநில பதிவெண் இருப்பதே தங்களின் பேருந்துகள் மீதான நடவடிக்கைக்குக் காரணம் என்கின்றனர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்.
பெர்மிட் எனப்படும் பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதி பெற, வட கிழக்கு மாநிலங்களில் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றும், புரோக்கர்களின் தரகுத் தொகையை சேர்த்தாலும் கூட 50 ஆயிரம் ரூபாயில் பெர்மிட் பெற முடிவதாக கூறுகின்றனர், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள். மாறாக, தமிழ்நாட்டில் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே அரசு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பெர்மிட் பெறுவதற்கு 5 லட்ச ரூபாய் வரையில் செலவிட வேண்டி இருப்பதாக தெரிவிக்கின்றனர், ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர்.
இந்நிலையில், நவம்பர் 28-க்குள் வெளிமாநில நம்பர் பிளேட்டுகளை தமிழக பதிவெண்ணுக்கு மாற்றும் படி உத்தரவு பிறப்பித்துள்ளது, தமிழ்நாடு போக்குவரத்துத் துறை. ஆனால், பெர்மிட் மாற்றம் செய்யும் போது 40 நாட்களாவது பேருந்தை இயக்க முடியாது என்று கூறும் ஆம்னி உரிமையாளர்கள், தற்போது அடுத்தடுத்து தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள் வருவதை கருத்தில் கொண்டு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணுக்கு மாறினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்பது அரசு அதிகாரிகள் கூறும் விளக்கம். ஆனால், பிற மாநில பர்மிட் இருந்தாலும் 3 மாதத்திற்கு ஒருமுறை சாலை வரியாக தமிழக அரசுக்கு 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலுத்துவதாக கூறும் ஆம்னி உரிமையாளர்கள், அதன் பிறகும் அதிகாரிகள் நடுவழியில் நிறுத்தி அபராதம் விதிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் பிரச்சினையை தீர்க்கும் அதே வேளையில், பொது மக்களின் கட்டணச் சுமையை குறைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
Comments