ஆம்னி பேருந்துகள் இன்று முதல் இயங்காது.. முன்பதிவு செய்த ஒரு லட்சம் பயணிகளின் நிலை..?
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்ற அறிவிப்பால் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப முன்பதிவு செய்துள்ள பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் அபாயம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதோடு அவற்றிற்கு சுமார் 19 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்துகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அனைத்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், தமிழ்நாடு அரசே ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என்றும் கூறினார். ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண விவகாரத்தில் முதலமைச்சர் தலையிடுவதோடு தமிழ்நாடு அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் விடுமுறை நிறைவடைந்து ஊர் திரும்ப இன்று மாலை பயணத்திற்கு ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தத்தால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது.
Comments