தேசியக் கொடியை தூக்கி வீசிய எஸ்.ஐ.! இடமாற்றம் செய்த காவல் ஆணையர்..!

0 5342

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்குள் ரசிகர்கள் எடுத்துச் செல்ல முயன்ற தேசியக் கொடியை பிடுங்கி வீசிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோதின. இதற்கு முன் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டியின் போது மைதானம் வெறிச்சோடி இருந்த நிலை போல இல்லாமல், இந்த போட்டியைக் காண 16 ஆயிரம் பேர் வந்திருந்தனர்.

போட்டியைக் காண கருப்பு டி-ஷர்ட் அணிந்து வந்தவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியே விற்பனை செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி ஜெர்ஸியை வாங்கி அணிந்து கொண்டு அவர்கள் உள்ளே சென்றனர்.

மைதானத்திற்குள் ரசிகர்கள் சிலர் எடுத்துச் செல்ல முயன்ற இந்திய தேசியக் கொடியை பிரதான வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் கைப்பற்றி தூக்கி வீசினார்.

ரசிகர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து கொடியை சுருட்டி சிறிது நேரம் கையில் வைத்திருந்த எஸ்.ஐ. நாகராஜன், பின்னர் அதை காவல் துறை வாகனத்தில் வைத்துக் கொண்டார்.

காவல் அதிகாரியின் இந்த செயலுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கொடியை அவமதித்த எஸ்.ஐ. நாகராஜனை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்திருப்பதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறியுள்ளார். மைதானத்துக்குள் இந்தியக் கொடி அனுமதிக்கப்பட்டதாகக் கூறி புகைப்படங்களை பகிர்ந்துள்ள காவல் ஆணையர், பாலஸ்தீனம் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் போட்டி நடக்கும் மைதானத்திற்குள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று தகவல் கிடைத்ததால், சர்ச்சைக்குரிய கொடிகள் மற்றும் பதாகைகளை மட்டுமே பறிமுதல் செய்ய உத்தரவிட்டப்பட்டு இருந்ததாகவும், எஸ்.ஐ. நாகராஜன் ஏன் தேசியக் கொடிகளை பறிமுதல் செய்தார் என்று துறைரீதியாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உடைக் கட்டுப்பாடு எதையும் தாங்கள் விதிக்கவில்லை என்றும் காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments