நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான இன்று, ஆயுதபூஜை கொண்டாட்டம் கோலாகலம்..!
நவராத்திரியின் நிறைவை குறிக்கும் வகையில் இன்று ஆயுதப்பூஜையும் சரஸ்வதி பூஜையும் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பை காண்போம்.
இந்திய ஆன்மீக வரலாற்றில் நவராத்திரியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஆயுத பூஜை. எந்த ஒரு கருவியாக இருந்தாலும், முதலில் அதற்கு தலைவணங்கி, பின்னர் அதைப் பயன்படுத்துவதை குறிப்பது இத்திருவிழா.
நவராத்திரியின் 8வது நாளுக்கு பிறகு, 9வது நாளில் அனைத்து ஆயுதம், உலோகங்களால் ஆன பொருட்கள், வாகனம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் இயந்திரங்கள் என அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து, அதற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
வாகனங்கள், கருவிகள், கணினிகள், கலப்பைகள் என்று அனைத்து வகை கருவிகளும் இன்று வணங்கி வழிபாடு செய்யப்படுகின்றன. ஆயுதப் பூஜை என்றால், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவியையும், அது தொழில், விவசாயம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதை மதிப்புடன் அணுகுவதைக் குறிக்கிறது.
அக்கிரமங்கள் புரிந்த கொடியன் மஹிஷாசுரனை, துர்கை அவதாரம் எடுத்து தனது கூர்வாள் போன்ற ஆயுதங்களை கொண்டு தேவி சாமுண்டீஸ்வரி வதம் செய்த நாள் ஆயுதபூஜை என்பது ஒருசாரரின் ஐதீகம்.... மேலும் மகாபாரதத்தில் குருச்சேத்திர போருக்கு புறப்பட்ட அர்ஜுனன், தனது ஆயுதங்களை பிரயோகித்து போர் புரிந்து வெற்றிப்பெற்றதை தொடர்ந்தும் இத்தினம் கொண்டாடப்படுவதாகவும், சமய மரபுகள் குறிப்பிடுகின்றன.
மக்கள் தங்கள் கருவிகள், மற்றும் வாகனங்களை கழுவி, அதற்கு திருநீறு, சந்தனம் குங்குமம் இட்டு பின்னர் வணங்குகிறார்கள். வியாபாரிகளும் தங்கள் கடைகளை சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். ஆயுதபூஜை என்பது அலுவலக புத்தகங்கள் உள்ளிட்டவற்றையும் வணங்குவதற்கு ஒரு அருமையான நாள்.
சரஸ்வதிபூஜையில் புத்தகத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால், முதலில் அதனை வணங்கி, பின்னர் அதைப் பயன்படுத்துவார்கள். ஞானத்தின் கல்வியின் தெய்வமாக வணங்கப்படும் சரஸ்வதி தேவியின் அருளைப் பெற இந்த நாள் மிகவும் உகந்தது. குழந்தைகளுக்கு முதல் அகரம் சரஸ்வதிபூஜை நாளில் எழுதப்படுகிறது.
நவராத்திரி பண்டிகையின் நிறைவைக் கொண்டாடும் வகையில் வாழ்நாள் தோறும் தொழில் கல்வி ஞானம் கிடைக்க இந்த வெவ்வேறு சடங்குகளை செய்ய பாரம்பரிய உடைகளில் தயாராகி, மக்கள் பண்டிகை வாழ்த்துக்களை தங்களுக்குள் பரிமாறிக்கொள்கிறார்கள்.
ஆயுத பூஜைக்கான மலைமகள், சரஸ்வதி பூஜைக்கான கலைமகள் வழிபாட்டுக்குப் பின்னர், செல்வத்தைக் கொட்டித் தரும் அலைமகள் மகாலட்சுமியைக் கொண்டாடும் விழாவாக, தீபாவளித் திருநாள் கொண்டாப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments