கொடிக்கம்பத்தை அகற்றி பா.ஜ.க.வினரை கைது செய்ததற்கு அண்ணாமலை கண்டனம்

0 1323

சென்னை பனையூரில் தனது வீட்டின் முன்பு நடப்பட்ட கட்சிக் கொடிக் கம்பத்தை அகற்றி, பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வீட்டின் முன்பு கொடி கம்பம் அமைக்கப்பட்டதற்கு அங்குள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பா.ஜ.க. மற்றும் இஸ்லாமியர்கள் இடையே நேற்று இரவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்பட்டதாகக்கூறி போலீசார் அதனை அகற்ற முற்பட்டனர்.

சம்பவ இடத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் கரு நாகராஜன் போலீசாரிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி உத்தரவின்பேரில் கொடி கம்பத்தை அகற்ற போலீசார் முயன்றபோது அதற்கு எதிராக கோஷமிட்டு கொடி கம்பத்தை கட்டி பிடித்தபடி பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கிரேனை பா.ஜ.க.வினர் தடுக்க முயன்றபோது போலீசார் தாக்கியதில் கட்சி நிர்வாகி ஒருவர் காயமடைந்தார். இறுதியில் கிரேன்கள் மூலம் கொடி கம்பத்தை போலீசார் பாதுகாப்பாக அகற்றினர். இது தொடர்பாக கரு நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 114 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, நவம்பர் 1 முதல் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 கட்சிக் கொடிக்கம்பங்கள் நடப்படும் என தெரிவித்துள்ளார்.

நூறாவது நாளான பிப்ரவரி 8ஆம் தேதியன்று காயமடைந்த நிர்வாகியின் முன்னிலையில் பனையூரில் பத்தாயிரமாவது கொடி கம்பம் நடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், கோட்டையில் தி.மு.க. கொடி பறப்பதால் அரசுக்கு என்ன ஆணவமா? என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு கொடி கம்பத்தை அகற்றிவிட்டதால் பா.ஜ.க.வின் வளர்ச்சியை கனவிலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments