மிஷன் ககன்யான் மாதிரி விண்கல சோதனை முதல் முயற்சியிலேயே வெற்றி!

0 3539

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் மாதிரி விண்கலத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. 

2025-ம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆளில்லா மாதிரி விண்கலன், ஒற்றை நிலை திரவ என்ஜின் கொண்ட TV- D1 ராக்கெட் மூலம் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வானிலை காரணமாக மாதிரி விண்கலன் ஓட்டம் 2 முறை தாமதப்படுத்தப்பட்டு, பின்னர் 3-வது முறை ராக்கெட்டின் எரிபொருள் எரியூட்டப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் சோதனை நடைபெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.

இதனிடையே, பிரச்சனை கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டதாக காலை 9.30 மணியளவில் தெரிவிக்கப்பட்டு, 10 மணிக்கு சோதனை ஓட்டம் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்தது. அதன்படி, காலை 10 மணிக்கு ககன்யான் மாதிரி விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது.

தரையில் இருந்து 16.6 கிலோ மீட்டர் தூரம் சென்ற விண்கலனில் இருந்து, வீரர்கள் இருக்கும் பகுதி தனியாகப் பிரிந்து பாராசூட் மூலமாக வங்கக்கடலில் வெற்றிகரமாக இறக்கப்பட்டு, கடலிலிருந்து மீட்கப்பட்டது.

சோதனை வெற்றிபெற்றதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

ககன்யான் சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். ஒலியின் வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்து முடிந்ததாக அவர் கூறினார்.

3, 4 ஆண்டுகளாக தவமிருந்தது, முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளதாக ககன்யான் திட்ட இயக்குநர் சிவக்குமார் தெரிவித்தார். சோதனை வாகனம், க்ரூ எஸ்கேப் சிஸ்டம், க்ரூ மாட்யூல் என மூன்றும் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக கூறினார்.

மாதிரி விண்கல சோதனையில், ராக்கெட்டில் இருந்து விண்வெளி வீரர்கள் வெளிவர உதவும் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சிறப்பாக செயல்பட்டதாக, ககன்யான் திட்டத்தின் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் இயக்குநர் ஹட்டன் தெரிவித்தார்.

ககன்யான் மாதிரி விண்கலத்தில் அடுத்த கட்டமாக ‘வாயு மித்ரா’ எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்ப ரோபோவை அனுப்பி, வெப்பநிலை மற்றும் இயங்கு நிலை குறித்த சோதனைகளை இஸ்ரோ மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments