பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறக்க விடுவதற்கு இசுலாமியர்கள் எதிர்ப்பு
சென்னையை அடுத்த பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே பாஜக கொடி பறக்க விடுவது தொடர்பாக பாஜக மற்றும் இசுலாமியர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பிற்காக போலீஸ் குவிக்கப்பட்டனர்.
அங்கு பாஜக கொடி கம்பம் அமைத்ததற்கு அங்குள்ள இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கொடிக் கம்பம் தொடர்பாக காவல்துறைக்கும் பாஜகவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாநில துணை தலைவர் கரு நாகராஜன் போலீசாரிடமும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி உத்தரவின் பேரில் போலீசாரின் பாதுகாப்புடன் பாஜக கொடி கம்பத்தை அகற்ற முற்பட்ட போது அதற்கு எதிராக கோஷமிட்டு கொடி கம்பத்தை கட்டி பிடித்தபடி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை குண்டுக்கட்டாக வேனில் ஏற்றிய போலீசார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சாலை ஓரத்தில் நின்றபடி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது மட்டுமின்றி சாலை மறியலில் ஈடுபடாதவாறு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
இறுதியில் ஒரு ராட்சத கிரேன் உள்ளிட்ட இரண்டு கிரேன் மூலம் பாஜக கொடி கம்பத்தை போலீசார் பாதுகாப்பாக அகற்றினர்.
Comments