'ககன்யான்' என்பது என்ன? முதல்கட்ட சோதனையில் நடக்கப் போவது என்ன..?
ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகின்றனர். ககன்யான் திட்டம் என்பது என்ன என்பதை விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு..
ககன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று பொருள். விண்ணை நோக்கிச் செல்லும் வாகனம் என்பதே ககன்யான். இந்த திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் 3 பேர் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர்.
எல்.வி. மார்க் -3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் அவர்கள் பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுவே ககன்யான் திட்டத்தின் நோக்கம்.
வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வருவது மிகவும் சவாலான பணி. அப்படிச் செய்யும் போது எதிர்பாராத விபத்துகள் நேரலாம். அந்த சூழலில் 3 பேர் அமரக் கூடிய கலனை தனியாகப் பிரித்து பாதுகாப்பான விதத்தில் கடற்பரப்பில் விழச் செய்வதுதான் இன்றைய ஆய்வின் இலக்கு.
இதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே-3 ஏவுகணையில் கலனை இணைத்து சுமார் 17 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கச் செய்து பின்னர் அதைத் தனியாகப் பிரித்து கடலில் வீழச் செய்து சோதிக்கவுள்ளனர். அந்தக் கலனை மீட்டு வந்த பின்னர் அதன் பாதுகாப்புத் தன்மையைப் பரிசோதித்து அதற்கு ஏற்ற விதத்தில் மேம்படுத்த உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.
இன்றைய சோதனைக்கு திரவ தள்ளுவிசையால் இயங்கும் ஒற்றை நிலை ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பரிசோதனை பணிக்காகவே சிறப்பாகக் கட்டமைக்கப்பட்ட அந்த ராக்கெட்டின் மேலே ஒரு சிறப்புக் கலன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் தான் விண்வெளி வீரர்களுக்கான இருக்கைகள் அமைந்திருக்கும்.
அவசரக் காலத்தில் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்கான ஏற்பாடுகளும் இந்தக் கலனில் இடம் பெற்றுள்ளன. ஏவுகணை புறப்படுவதில் ஏதாவது பிரச்னை இருந்தால் கலனை விரைவாக வெளியே இழுத்துத் தள்ளவும் வசதிகள் உள்ளன. கலனில் உள்ள பாராசூட் மற்றும் பிற மீட்பு அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்றும் இன்று பரிசோதிக்கப்பட உள்ளது.
திட்டத்தைச் செயல்படுத்த இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மேலும் பல்வேறு நிலைகளை ககன்யான் கடக்க வேண்டும். இன்றைய சோதனை முதல் முன்னோட்ட சோதனை மட்டுமே. அடுத்ததாக, வாகனத்தைப் பரிசோதிப்பதற்கான டி2, டி3, டி4 ஆகிய சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.அவற்றில் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விண்வெளியின் கடுமையான சூழல் மற்றும் கதிர்வீச்சை எதிர்கொள்ளும் திறன் சோதிக்கப்படும்.
சோதனைகளை முடித்து திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா எட்டிப்பிடிக்கும்.
Comments