கடன் வாங்கியவரின் நடு வீட்டில்... கட்டில் போட்டு படுக்கை... 3 நாட்களாக சிறை வைத்த கும்பல்...!
ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டிற்குள் கட்டில், பீரோ, ஃபிரிட்ஜ் உடன் நுழைந்து குடியேறிய கந்து வட்டி கும்பல் ஒன்று அவரது குடும்பத்தினரை கத்தி முனையில் சிறை பிடித்து 3 நாட்களாக வைத்திருந்த நிலையில், திண்டுக்கல் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து குடும்பத்தினரை மீட்டனர்.
மாமியார் வீட்டிற்கு புதுகுடித்தனம் செல்லும் மருமகள் சீதனம் எடுத்துச் செல்வது போல கட்டில், பீரோ, சோபா, சமையல் பாத்திரங்களை ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரின் நடு வீட்டில் இறக்கி வைத்து விட்டு குடியேற உள்ளதாக அட்ராசிட்டியில் ஈடுபட்டனர் கந்து வட்டி கும்பல் ஒன்று.
திண்டுக்கல்லைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான திண்ணப்பன் என்பவர் காரைக்குடியை சேர்ந்த ராஜகருப்பையா என்பவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 4 கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும், அதற்கு இரண்டு கோடி ரூபாய் அசலும் 12 கோடி ரூபாய் வட்டியும் கட்டியதாக கூறப்படுகிறது.
மீதமுள்ள தொகையை உடனே செலுத்தக் கோரி ராஜகருப்பையாவின் ஆதரவாளர்கள் கடந்த 17ம் தேதி திண்ணப்பனின் வீட்டிற்குள் புகுந்து குடியேறியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் பீரோ, கட்டில், ஃபிரிட்ஜ் மற்றும் சமையல் பாத்திரங்களை கொண்டு வந்து இறக்கியதாக தெரிவித்தனர் திண்ணப்பன் குடும்பத்தினர்.
கத்தி முனையில் திண்ணப்பனின் மனைவி, மகன், மருமகள், 2 குழந்தைகளை சிறை வைத்ததோடு, செல்போன்கள் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டதோடு, இரண்டு கார்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
கார்களை திண்டுக்கல்லிலிருந்து காரைக்குடிக்கு எடுத்துச் செல்வதற்கு டீசல் போட வேண்டுமென மிரட்டி தன்னிடமே பணத்தை வாங்கினர் என தெரிவித்தார் திண்ணப்பன்.
வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு சிறை பிடித்ததோடு, குழந்தைகளை மிரட்டி அறையில் அடைத்ததோடு, பெண்களை தரக்குறைவாக திட்டியதாக தெரிவித்தார் திண்ணப்பனின் மருமகள் லட்சுமி.
வாங்கிய கடனுக்கு ஈடாக சொத்தை எழுதித் தருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறி வீட்டை விட்டு நைசாக வெளியேறிய திண்ணப்பன், உறவினர்கள் மூலமாக இரவு நேரத்தில் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனை சந்தித்து தனது நிலையை விளக்கினார்.
எஸ்.பியின் உத்தரவைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீஸார், திண்ணப்பனின் வீட்டில் கட்டில் போட்டு படுத்திருந்த ராஜகருப்பையாவின் ஆட்கள் எனக் கூறப்படும் ரவி, சரவணன் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
வீட்டிலிருந்த பணம், நகை, கார் ஆகியவற்றை அபகரித்து சென்றுள்ளதாக தெரிவித்த திண்ணப்பன், தான் ஏற்கனவே கையெழுத்து போட்டு வைத்திருந்த ஏராளமான வங்கி காசோலைகளையும் அந்த கும்பல் எடுத்துச் சென்று விட்டதாகவும் எஸ்.பியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்தை கந்து வட்டிக்கும்பல் மூன்று நாட்களாக சிறை வைத்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments