செவ்வாடை பக்தர்களின் அம்மா...! பங்காரு அடிகளாருக்கு இறுதி அஞ்சலி!!

0 2099

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. செவ்வாடை பக்தர்கள் அம்மா, அம்மா என, கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மேல்மருவத்தூரில் சக்தி பீடத்தை அமைத்து பெண்களே நேரடியாக கருவறையில் நுழைந்து அபிஷேகம் செய்யலாம் என்ற பூஜை முறையை உருவாக்கியவர் பங்காரு அடிகளார்.

மாரடைப்பால் அவர் காலமான செய்தி அறிந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செவ்வாடை பக்தர்கள் மேல்மருவத்தூர் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோயிலின் அருகிலுள்ள தியான மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சாலையின் இருமருங்கிலும் நின்று பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தியான மண்டபத்துக்கு நேரில் சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்காரு அடிகளாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா ஆகியோரும் பங்காரு அடிகளாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோரும் பங்காரு அடிகளாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமது கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அரசியல் கட்சியினர் பங்காரு அடிகளாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

மடாதிபதிகள், ஆதீனகர்த்தாக்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இசுலாமியர்கள் ஏராளமானோர் தத்தமது மத முறைப்படி அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர். நித்தியானந்தாவின் படத்தை ஏந்திக் கொண்டு வந்து அவரது சீடர்கள் சைவ மந்திரங்களை ஓதி அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சந்தானம், டிரம்ஸ் சிவமணி போன்ற திரைத்துரையினரும் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் துவங்கிய பங்காரு அடிகளாரின் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

பங்காரு அடிகளாரின் உடல், கருவறையின் பின்புறம் உள்ள அருள்வாக்கு கூடத்தின் மேற்கு திசையில் புற்று பகுதிக்கு அவரால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமாதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சந்தனத்தால் செய்யப்பட்ட நாற்காலியில் சித்தர் முறைப்படி அடிகளார் அமர வைக்கப்பட்ட நிலையில் சமாதியில் இறக்கப்பட்டார்.

வில்வம், உப்பு, திருநீறு, வேப்பிலை, தர்பை புல், சந்தனம், குங்குமம் மற்றும் ஐம்பொன் உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் குழியில் இடப்பட்டு பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி என்ற முழக்கத்துடன் பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments