லியோ கெட்டப்பில் வந்தோம்.. மணிக்கணக்கா காத்து நின்னோம்.. டிக்கெட் போலின்னு விரட்டுறாங்க..! இது நியாயமா அ.இ.த.வி.ம.இ
கடலூர் புவனேஸ்வரி திரையரங்கின் பெயரில் லியோ படத்திற்கு அதிக விலை வைத்து விற்கப்பட்ட ரசிகர் மன்ற போலி டிக்கெட்டை வாங்கிக் கொண்டு படம் பார்க்க வரிசையில் காத்திருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை திரையரங்கு நிர்வாகம் விரட்டி விட்டதால் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு சென்றனர்..
முதல் நாள் முதல் காட்சி என்ற கண்கட்டிவித்தையை நம்பி 100 ரூபாய் டிக்கெட்டை ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் 600 ரூபாய் கொடுத்து வாங்கி வந்த நிலையில் அந்த டிக்கெட்டே போலி என்று தெரியவந்ததால் விரக்தி அடைந்து வெளியேறும் விஜய் ரசிகரின் ஆதங்க குரல் தான் இது..!
கடலூர் புவனேஸ்வரி திரையரங்கில் லியோ படம் காலை 9 மணிக்காட்சி படம் வெளியாகி இருந்த நிலையில் ரசிகர் காட்சிக்கு போலியான டிக்கெட்டுடன் படம் பார்க்க சென்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். திரையரங்கில் இருக்கும் இருக்கைகளை விட அளவுக்கதிகமாக டிக்கெட்டுகளை ரசிகர் காட்சிக்கு போலியான சீல் வைத்து விற்றது அம்பலமான நிலையில் திரையரங்கிற்குள் நுழைய முயன்ற ரசிகர்களை போலீசை வரவழைத்து விரட்டி விட்டனர்
விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து , ஒரு டிக்கெட்டு 600 ரூபாய் என்று தங்களுக்கு விற்கப்பட்ட நிலையில் அந்த டிக்கெட்டுக்கள் அனைத்தும் போலி என்று திரையரங்க சீலை சுட்டிக்காட்டி விரட்டியதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்
லியோ விஜய் போல கெட்டப்பில் வந்த விஜய் ரசிகரோ, மணி கணக்கில் காத்திருந்து வெளியேற்றப்பட்டதால், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீது குற்றஞ்சாட்டினார்
Comments