அதிக விலை கொடுத்து டிக்கெட் எடுக்காதீங்க..! லியோ இயக்குநர் லோகி ரசிகர்களுக்கு வேண்டுகோள்!!
லியோ படத்தின் டிக்கெட்டுகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்று நடிகர் விஜயின் ரசிகர்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வலியுறுத்தியுள்ளார். விஜய் படம் என்றாலே சிறுசிறு பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்றும் லோகேஷ் தெரிவித்துள்ளார்.
லியோ காய்ச்சல் வந்து சுற்றிக் கொண்டிருக்கிறனர், விஜய் ரசிகர்கள்! தமிழ்நாடு முழுவதும் படம் வெளியாகும் திரையரங்கங்கள் முன் டிக்கெட்டுக்காக தவமாய் தவமிருந்து வருகின்றனர்!
சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கும் தனக்கும் புரிதல் நன்றாக இருந்ததாகவும், விஜய் கொடுத்த சுதந்திரத்தால் தனது பாணியில் படம் நன்றாக உருவாகியுள்ளததாகவும் கூறினார்.
லியோ பட டிரெய்லரில் இடம் பெற்ற கெட்ட வார்த்தை படத்தில் சென்சார் செய்யப்பட்டுள்ளதாக கூறிய லோகேஷ், கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் அந்த சொல்லை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.
டிரெய்லரில் சர்ச்சைக்குரிய சொல் இடம் பெற்ற போதே பிரச்சினை வரும் என்பது தமக்குத் தெரியும் என்றார் லோகேஷ். இல்லாவிட்டாலும், விஜய் படம் என்றாலே சிறிய சிறிய பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்றும் தெரிவித்தார்.
திரைப்படங்கள் என்பவை வெறும் பொழுது போக்குக்கானவை என்பதால், அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டார் லோகேஷ்.
அடுத்ததாக ரஜினி படத்தை இயக்குவதைவிட வேறு என்ன மகிழ்ச்சி தேவை என்றும், நடிகர் அஜித்தை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் லோகேஷ் கூறினார்.
தனது படங்களில் அதிகப்படியான வன்முறைக் காட்சிகள் பற்றிய கேள்விக்கு, தான் வன்முறை படம் எடுக்கவில்லை என்றும் ஆக்ஷன் படம் தான் எடுப்பதாகவும் பதிலளித்தார், லோகேஷ்.
Comments