ரகசிய காதல் கீதம்.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு பாம்பு முத்தத்தால் கொலை..!

0 2670

ரகசிய காதலை கைவிட மறுத்த ரியல் எஸ்டேட் அதிபர் போதை மயக்கத்தில் படுத்திருந்த போது, பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததாக மனைவி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்..

பாம்பு முத்தத்தால் கொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன் இவர் தான்..!

ஆந்திர மாநிலம் கோதாவரிகனியைச் சேர்ந்த 42 வயது ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு உறங்கச் சென்றவர் காலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக மனைவி லலிதா உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பிரவீனின் உதட்டருகே ரத்தம் கசிந்த நிலையில் காணப்பட்டதால் , உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார், பிரவீனின் மனைவி லலிதாவை பிடித்து விசாரித்த போது, கணவனின் காதலால் லலிதா நாகினியான பின்னணி அம்பலமானது.

ரியல் எஸ்டேட் தொழிலில் பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால் பிரவீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மனைவி லலிதாவுக்கு தெரியவந்ததை அடுத்து கணவரை கண்டித்துள்ளார். இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ரகசிய காதலை பிரவீன் தொடர்ந்துள்ளார்.

இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது லலிதாவை கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகின்றது. இதனால் பொறுமை இழந்த மனைவி லலிதா, ரகசிய காதலை கைவிட மறுத்த கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, பிரவீன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை
செய்யும் சுரேஷ் என்பவரின் உதவியை நாடி உள்ளார். கணவரை கொன்றால் பிளாட் ஒன்றை எழுதிக் கொடுப்பதாக கூறியுள்ளார். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் இயற்கை மரணம் போல இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

அதன்படி கடந்த 10-ம் தேதி இரவு பிரவீன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தார் லலிதா. இதையடுத்து தனது நண்பர்களுடன் வந்த சுரேஷ், தான் கையோடு எடுத்து வந்திருந்த நாகப்பாம்பு ஒன்றை கொண்டு பிரவீனை கடிக்க வைத்துள்ளனர். சரியாக கீழ் உதட்டருகே பாம்பு தீண்டியதால் சில நிமிடங்களில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிரவீன் உயிரிழந்ததாகவும், அதனை மறைத்து கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக லலிதா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அவரை கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த தங்கசங்கிலியையும், எடுத்துச்சென்றதால் கொலையாளிகளிடம் இருந்து அவற்றை மீட்ட போலீசார் அவர்களின் செல்போன் களை கைப்பற்றினர். கணவனை பாம்பை ஏவி கொலை செய்த லலிதா, கூலிப்படை சுரேஷ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கு சாட்சியாய் நிகழ்ந்துள்ளது இந்த கொலை சம்பவம்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments