ஒரு மணி நேரம் விடாமல் வெடித்த பட்டாசுகள்.. பறிபோன 13 உயிர்கள்.. பதற வைக்கும் பின்னணி தகவல்கள்..!

0 2449

சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஒன்றின் உற்பத்தி அறை வெடித்து சிதறிய விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்....

சிவகாசியை அடுத்துள்ள ரெங்கபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் கனிஷ்கர் என்ற பட்டாசு ஆலையை நடத்தி வந்தார். ஆலையின் நுழைவுவாயிலில் பட்டாசு விற்கும் கடையும் இயங்கி வந்தது. இந்த கடைக்கு பட்டாசு வாங்க வந்த ஒருவருக்கு, சுமார் 500 அடி உயரத்துக்குச் சென்று வெடிக்கும் வாண வெடி ஒன்றை ஊழியர் வெடித்துக் காட்டியதாக தெரிகிறது.

அதே வேளையில், ஆலையின் ஹாலில் அமர்ந்து 15 பேர் பட்டாசுகளை கிஃப்ட் பாக்ஸில் போடும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு அருகே பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. வாடிக்கையாளருக்கு வெடித்துக் காட்டப்பட்ட ஃபேன்ஸி வாண வெடியின் தீப் பொறி ஒன்று ஹாலில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளுக்கு நடுவே விழுந்து தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

சிறிது நேரத்தில் பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறின. அப்போது எழுந்த புகை மூட்டம் காரணமாக, பணியாளர்கள் வெளியே தப்ப முடியவில்லை என்று கூறப்படுகிறது.
சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்தபடி இருந்தன. இதனால் உள்ளே இருந்தவர்களை மீட்க முடியவில்லை.

தீயணைப்புப் படையினர் வந்து போராடி நெருப்பை அணைத்தனர். அதற்குள் ஹாலில் இருந்த தொழிலாளர்கள் 13 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த ஆலையை மதுரை சரக டி.ஐ.ஜி. ரம்யா பாரதி மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் ஆய்வு செய்தனர். விபத்து பற்றி விசாரணை நடத்தி விதிமீறல்கள் நடந்துள்ளதா என்று கண்டறிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன், சிவகாசியை அடுத்த கிச்சநாயக்கன்பட்டியில் முத்துவிஜயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், தரைச் சக்கரத்துக்கான மூலப் பொருட்களை தயார் செய்து வந்த போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.

இரு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments