நவராத்திரி விழாவின் 2ஆம் நாள் கோலாகலம்..!

0 3375

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவின் 2வது நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவில், நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான நேற்று ரிஷப வாகனத்தில் பராசக்தி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவ திருவிழாவின் 2வது நாளில் ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், வரதராஜ பெருமாள் ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் 2ஆம் நாளில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இலுப்பத்தோப்பு அருள்மிகு ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் என்கிற ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளில் மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ துர்க்கை அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கோவில் ஆலயத்தில் நவராத்திரி கொலு பூஜை யின் 2-ம் நாளில் அம்மன் அம்பிகை தர்பார் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் 2-ம் நாளான நேற்று அம்பாள் விசுவகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் கற்பக விருட்சம் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments