தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் நெசவுத் தொழில் பாதிப்பு - என் மண், என் மக்கள் யாத்திரையின் 3-வது கட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் பேச்சு
தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் என் மண், என் மக்கள் யாத்திரையின் 3-வது கட்டத்தை துவக்கி வைத்து பேசிய பியூஷ் கோயல், வட மாநிலங்களில் தமிழ் பண்பாட்டை வளர்க்க பிரதமர் பாடுபடும் நிலையில், நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலுக்கு காங்கிரசார் உரிய மரியாதை அளிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய போது, இந்து சம்பிரதாயத்தை அழித்து, இந்துக்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறியுள்ளார். 40 ஆண்டுகளில் அறநிலையத்துறையின் 2 லட்சம் ஏக்கர் நிலத்தை காணவில்லை என்றார் அவர்.
இந்தியாவின் ஒரே ஆயத்த ஆடை பூங்காவான திருப்பூரில் உள்ள நேதாஜி அப்பாரல் பார்க் முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் கொண்டு வரப்பட்டதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, மத்திய அரசை குறை சொல்வதையே வேலையாக செய்து வரும் தி.மு.க. அரசு, நெசவாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து 42-வது நாள் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல். முருகன் ஆகியோருடன் சேர்ந்து அண்ணாமலை நடந்து சென்றார். அவருக்கு பா.ஜ.க. தொண்டர்கள் கட்சிக் கொடிகளை ஏந்தி வரவேற்பளித்தனர்.
Comments