சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தை 3 மணி நேரத்தில் மீட்பு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை கைது செய்தனர்.
ஒடிஷாவைச் சேர்ந்த நந்தினி கண்காகர் என்ற பெண் சொந்த ஊர் செல்வதற்காக தனது ஒரு வயது ஆண் குழந்தையுடன் நள்ளிரவு சென்ட்ரயில் ரயில் நிலையம் வந்துள்ளார்.
காலை 6.30 மணிக்கு ரயில் புறப்படும் என்பதால், அங்கேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத ஒரு தம்பதி அவருடன் பேச்சு கொடுத்து நட்பாகியுள்ளனர். அவர்களை நம்பிய நந்தினி, குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு கழிவறை சென்று திரும்பி வந்து பார்த்தபோது மர்ம தம்பதி குழந்தையை கடத்தியது தெரியவந்தது.
புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து, மர்ம தம்பதி ஆட்டோவில் ஏறிச் சென்றதை கண்டுபிடித்தனர். ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து ஓட்டுநரிடம் விசாரித்தபோது குன்றத்தூரில் மர்ம தம்பதியை இறக்கிவிட்டதாகக் கூறியுள்ளார்.
குன்றத்தூர் விரைந்த போலீசார், வாடகை வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ஜார்கண்ட் மாநில தம்பதியை கைது செய்து குழந்தையை மீட்டனர். 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் கடத்தியதாக அவர்கள் கூறிய நிலையில், அவர்களுக்கு ஆண் குழந்தை இருப்பதை விசாரணையில் போலீசார் கண்டுபித்தனர்.
Comments