நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி... இளைஞருக்கு தர்ம அடி - போலீசார் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி அருகே நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த இளைஞரை சென்னையில் வைத்து மடக்கிய பாதிக்கப்பட்டவர்கள், ஊருக்கு அழைத்து வந்த தர்ம அடி கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சமீர் அகமது என்பவர் சமீர் குரூப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை துவங்கி, 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் ஒரு வருடத்திற்கு மாதம் 12 ஆயிரம் வீதம் பணம் தருவது உள்ளிட்ட கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை நம்பிய 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. பணத்தை திரட்டியதாக கூறப்படும் சமீர் அகமது முதலில் ஒழுங்காக மாதம் 12ஆயிரம் தந்தவர், பின்னர் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், சமீர் அகமது தலைமறைவாகி விட்டதாக சொல்லப்படுகிறது.
பணத்தை கொடுத்து ஏமாந்த மக்கள் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் சென்னையில் ஈசிஆர்-ல் அவர் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவரை பிடித்து, சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். தங்கள் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டு, தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து தர்ம அடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீர் அகமதுவின் மனைவி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் அவரை மீட்டனர். எஸ்.பி அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளிக்குமாறு பாதிக்கப்பட்டவர்களை அறிவுறுத்திய போலீசார், சட்டத்தை கையில் எடுக்க கூடாது என எச்சரித்துச் சென்றனர்.
Comments