கொலு பொம்மைகளை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விமரிசையாக கோவிலில் கொண்டாடப்பட்ட நவராத்திரி விழா..!
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நவராத்திரி விழாவின் முதல்நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நவராத்திரி கொலு பொம்மைகள் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பாமா , ருக்மணி சமேதரராக ராஜகோபாலசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவின் முதல் நாளான நேற்று அம்பாள் சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் கோலத்தில்
எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் பக்தர்கள் புடை சூழ சங்க நாதம் ஒலிக்க நவராத்திரி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளில் அம்மன் குமாரிகா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளில் ஸ்ரீதேவி,பூதேவி, பெருந்தேவி தாயாருடன், ஊஞ்சல் சேவையில் வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காமாட்சி அம்மன் கோவிலில் கொலு பொம்மை வைத்து கர்நாடக இசையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டதை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
வேலூர், கும்பகோணம், காரைக்கால், தேவூர், குத்தாலம், திருமணஞ்சேரி ,மாங்காடு மற்றும் ராமநாதபுரத்தில் அமைந்துள்ள கோவில்களிலும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
Comments