ஒரு வினாடி தூக்கம்.. அமாவாசை பூஜைக்கு சென்ற 7 பேர் உயிர் பலியான விபரீதம்..!

0 4432

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் சாமிகும்பிட்டு விட்டு கர்நாடகாவுக்கு சென்ற கார், லாரி மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது. ஒரு வினாடி தூக்கத்தால் நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் மேம்மலையூனூர் அங்காளம்மன் கோவிலில் சாமி கும்பிட கர்நாடகாவில் இருந்து 8 பேர் ஒரு காரில் வந்தனர்.

அமாவாசை பூஜையில் பங்கேற்று சாமி கும்பிட்டுவிட்டு காரில் கர்நாடகா திரும்பினர்.

செங்கம் பக்கிரி பாளையம் புறவழிச்சாலையில் கார் வந்த போது எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேராக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சதிஷ், அவரது மகன்கள் சித்தார்த், சர்வேஷ் மற்றும் சென்னப்பன், மலர் மணிகண்டன், ஹேமந்த்குமார் ஆகிய 7 நபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த விபத்தில் காயம் அடைந்த காவியா என்ற பெண்ணிற்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் பலியானவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்விற்கு பின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விபத்தில் பலியான சதீஷ் மற்றும் அவரது மகன்கள் சித்தார்த், சர்வேஷ் ஆகியோரின் உடல்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை என்ற கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

மீதமுள்ள சென்னப்பன், மலர், மணிகண்டன் ஹேமந்த்குமார் ஆகியோரின் உடல்கள் கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

இறந்தவர்களின் உடல்களுக்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அமரர் ஊர்தியில் அவர்களது உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கார் ஓட்டுனர் ஒரு வினாடி கண் அசந்ததால் கார் நிலை தடுமாறி லாரியுடன் நேருக்கு நேராக மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

தொலைத்தூர பயணத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தூக்கம் வந்தால் , வாகனத்தை ஏதாவது பெட்ரோல் நிலையத்தில் ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்வது இது போன்ற கோர விபத்துக்களை தடுக்கும் என்று போலீசார் அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments