40 லட்சம் கிலோ குண்டுகள்! இடிபாடுகளுக்கு இடையே உணவு, குடிநீரின்றி தவிக்கும் காஸா!! அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

0 2057

காஸா மீது இதுவரை 40 லட்சம் கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டு நிலையில், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டால் காஸா கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

5000 வீரர்கள்! 75-க்கும் அதிகமான போர் விமானங்கள்! அதிநவீன ஆயுதங்களுடன் மத்தியத் தரைக்கடற் பகுதியில் முகாமிட்டுள்ளது, அமெரிக்காவின் ஜெரால்டு ஃபோர்டு போர்க்கப்பல்.

இது போதாதென்று, ட்வைட் ஹைசன்ஹோவர் என்ற அமெரிக்காவின் மற்றொரு பிரம்மாண்டமான போர்க் கப்பலும் மத்திய தரைக்கடற் பகுதி நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஹமாஸை ஒடுக்குவதற்காக இன்னும் இஸ்ரேலுக்கு எவ்வளவு ஆயுதங்கள் வேண்டுமானாலும் நிபந்தனையின்றி வழங்கத் தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது. மறுபுறம், ப்ரூஸெல்ஸ் நகரில் நேட்டோ நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து, ஹமாஸ் தாக்குதலில் தங்கள் நாட்டின் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட காட்சிகளைக் காட்டி இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் ஆதரவு திரட்டினார்.

மறுபுறம், 6-வது நாளாக இரு தரப்பும் பரஸ்பரம் குண்டுகளை வீசி வருகின்றன. இஸ்ரேல் தாக்குலில் காஸாவில் உள்ள இரு பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் முற்றிலும் நொறுங்கி விட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் காஸாவில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடும் அதிகரித்து வருவதாக இங்கு சிக்கியுள்ள ஸ்காட்லாந்து நாட்டின் மூத்த தலைவர் ஒருவரின் மாமியார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

அரசு அனுமதி தந்தால் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தத் தயார் என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கு முன் 24 மணி நேரம் போர் நிறுத்தம் செய்து காஸாவில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை வெளியேற்ற இஸ்ரேல் உதவ வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

காஸா மீது இதுவரை 40 லட்சம் கிலோ எடையுள்ள ஆறாயிரம் வெடிகுண்டுகளை தாங்கள் வீசி இருப்பதாக கூறியுள்ள இஸ்ரேல், கடந்த 7-ஆம் தேதி தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை தேடித் தேடி வேட்டையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் இதோடு நிற்காது என்றும், ஹமாஸ் அமைப்பின் உச்ச தலைவர் யாஹ்யா சின்வாருக்கு முடிவு கட்டும் வரை நீடிக்கும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

மறுபுறம், காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். மேலும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்ஸி சிரிய நாட்டின் தலைவர் பஷார் அல்-அஸாத்துடன் பேசி, அரபு மற்றும் இஸ்ரேலிய நாடுகள் இணைந்து இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈரானிடம் இருந்து ஹமாசுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்களை இஸ்ரேல் குண்டு வீசி தகர்த்துள்ளது.

சிரிய விமான நிலையங்கள் மீதான இஸ்ரேல் குண்டு வீச்சு சர்வதேச விதிமுறைகள் மீறும் செயல் என ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு நாடுகள் திரண்டு கொண்டிருக்கும் நிலையில், காஸாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments