கடனை திருப்பிக் கேட்ட இளைஞர்... கத்தி, அரிவாளுடன் பதில் சொன்ன த.பெ.தி.க. மாவட்டத் தலைவர்...!

0 1966

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதற்காக இளைஞரை அடியாட்களோடு சென்று சரமாரியாக வெட்டியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவரை போலீஸார் தேடி வருகின்றனர். கொலை முயற்சி சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இளைஞர் ஒருவரை 3 பேர் கும்பல் மாறி மாறி தலையிலும், உடலிலும் வெட்டிச்சென்றதால் இளைஞரின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் தான் இவை.

சென்னை ராயப்பேட்டை முத்தையா தெருவை சேர்ந்தவர் கும்மு என்கிற குமரேசன். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ராயப்பேட்டை பகுதி செயலாளரான கணேசன் என்பவரின் சகோதரர். சம்பவத்தன்று குமரேசன் வீட்டை விட்டு வெளியே வரவும் அவரை ஒரு கும்பல் திடீரென ஆயுதங்களுடன் வழிமறித்தது. தப்பியோட முயன்றவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டவும், குமரேசனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த பெண்கள் வெளியே ஓடி வந்தனர். அவர்களை கருப்புச்சட்டை அணிந்த ஒருவன் கத்தியுடன் விரட்டினான்

இதையடுத்து கையில் கற்களுடன் குடும்பத்து பெண்கள் விரட்டியதால் கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினர் .

பலத்த காயமடைந்த குமரேசனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மேல்சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூர தாக்குதல் குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டத் தலைவரான குமரன் என்கிற டிங்கர் குமரன் உள்ளிட்ட 7 பேர் மீது ஐஸ்ஹவுஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

டிங்கர் குமரன், டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்த போது கணேசனிடம் கடனாக வாங்கிய 15 லட்சம் ரூபாயை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. அதனை, கணேசனின் சகோதரரும் த.பெ.தி.க உறுப்பினருமான குமரேசன் திருப்பிக் கேட்டதால் டிங்கர் குமரனுடன் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தான் குமரேசனை டிங்கர் குமரன் அடியாட்களுடன் சென்று தாக்கியதாக தெரிவித்த போலீஸார், டிங்கர் குமரன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி எனத் தெரிவித்தனர். டிங்கர் குமரன் மீது அரசு அலுவலகம் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது, பூணூல் அறுப்பு வழக்குகள் உள்பட 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த போலீஸார், 2 முறை அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments