கடன் பிரச்சனையை சமாளிக்க முழுநேர திருடனாக மாறிய கால் டாக்ஸி டிரைவர்
கடன் பிரச்சனையை சமாளிக்க முழுநேர திருடனாக மாறிய கால்டாக்ஸி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை குரோம்பேட்டை அருகே நெமிலிச்சேரியில் ராஜேஷ் என்பவரின் வீட்டில், திருட்டுப்போன புகார் குறித்து சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் கால்டாக்ஸி ஒன்று வந்து போனது தெரியவந்துள்ளது.
பதிவு எண்ணை வைத்து கார் பல்லாவரத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டறிந்த போலீசார், வாடகைக்கு சவாரி கேட்பது போல், போன் செய்து அவரை வரவழைத்து வளைத்து பிடித்தனர்.
பூ வியாபாரம் செய்து வந்த பாலாஜி அதில் வருமானம் குறைவாக வந்ததால், தவணைமுறையில் கால் டாக்ஸி வாங்கி ஓட்டி வந்ததும், கொரோனா காலத்தில் வருமானமின்றி, கடன் வாங்கிய நிலையில் அதனை அடைக்க திருட்டுத் தொழிலில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. பாலாஜி மீது, காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments