மகளிர் விடுதி பெண் ஊழியரை காட்டுத்தனமாக அடித்து உதைத்த விடுதி உரிமையாளர் ஓட்டம்..! வீடியோ வெளியானதால் திடீர் விசாரணை
சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் மகளிர் விடுதி பெண்ஊழியரைஅறையில் அடைத்து உரிமையாளர் கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையில், தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதால் மாங்காடு போலீசாருக்கு பயந்து விடுதி உரிமையாளர் தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகளிர் தங்கும் விடுதி ஊழியரை , விடுதி உரிமையாளர் கடுமையாக தாக்கும் காட்சிகள் தான் இவை..!
தூத்துக்குடியை சேர்ந்த பரமசிவன் என்பவர், சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்தார். 400க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி உள்ள இந்த விடுதியில் 3 மாதங்களுக்கு முன்பு முகலிவக்கத்தை சேர்ந்த கணபதி ஜானகி என்ற பெண் பணிக்கு சேர்ந்தார். பரமசிவன் கட்டுமான தொழில் செய்து வந்த நிலையில், விடுதியில் பெரும்பாலான நேரம் கணபதி ஜானகி பணியில் இருந்ததாக கூறப்படுகின்றது
இந்த நிலையில் பரமசிவன், மகளிர் தங்கும் விடுதி வரவு செலவு கணக்கை சரி பார்த்த போது லட்சக்கணக்கில் பணம் குறைவது தெரியவந்தது. இதையடுத்து விடுதியில் தங்கி உள்ள பெண்களிடம் விசாரித்த போது அவர்களிடம் இருந்து மாதக்கட்டணத்தை கணபதி ஜானகி தனது வங்கிக்கணக்கில் வாங்கிக் கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 1 ந்தேதி கணபதி ஜானகியை அழைத்து விசாரித்த பரமசிவன் , தனக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டதாகவும், 2013 ஆம் ஆண்டில் இருந்து தான் நடத்தி வந்த விடுதியை கொரோனா காலத்தில் விட்டுச்சென்றதால், தற்போது தனக்குத்தான் சொந்தம் என்றும் கூறி, அவர் பணத்தை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது . இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் அவரை சரமாரியாக தாக்கினார்
பதிலுக்கு பதில் பேசியதால், கணபதி ஜானகியை காட்டுத்தனமாக தாக்கத்தொடங்கிய பரமசிவன், அருகில் நின்றவர்கள் தடுத்தும் கேட்காமல் பேனாவை எடுத்து குத்தவும் முயன்ற தோடு, எட்டியும் உதைத்தார்.
ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாமல் வெளியே எழுந்து செல்ல முயன்ற கணபதி ஜானகியை, செல்ல விடாமல் தடுத்து தலைமுடியை பிடித்து இழுத்து சோபாவில் தள்ளி அடித்து உதைத்தார்
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கணபதி ஜானகி மாங்காடு போலீசில் புகார் அளித்தும், பரமசிவன் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வழக்கு விசாரணையை கிடப்பில் போட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணபதி ஜானகியை, பரமசிவன் காட்டுத்தனமாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியானதால் போலீசார் வழக்கை தூசி தட்டினர். அதற்குள்ளாக பரமசிவன் உஷாராகி தலைமறைவானதாக கூறப்படுகின்றது. போலீசாரின் தாமதமான விசாரணையால் தாக்கியவர் தப்பிச்சென்று விட்டதாக கணபதி ஜானகி குற்றஞ்சாட்டி உள்ளார். போலீசுக்கு பயந்து தப்பி ஓடிய விடுதி உரிமையாளர் பரமசிவனை மாங்காடு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Comments