தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து கொடூர கொலை வீட்டில் நகை பணம் கொள்ளை..! பாதுகாப்புக்கு சிசிடிவி பொறுத்துங்க
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தனியாக வசிக்கும் முதிய தம்பதியரை கொலை செய்து நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகின்றது. இந்த வகையில், பரமத்திவேலூர் அடுத்த குப்புச்சி பாளையத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கத்தி கூச்சலிட்டாலும் உதவிக்கு ஒருவர் கூட வர இயலாத வகையில், ஊருக்கு ஒதுக்குபுறமாய் தங்கி இருக்கும் முதியவர்கள் தான் இந்த கொடூர கொலை கும்பலின் குறி..!
கடந்த ஆண்டு மே மாதம் 1ந்தேதி ஈரோடு உப்பிலி பாளையம் தோட்டத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வந்த 73 வயது முதியவர் துரைச்சாமியையும் அவரது மனைவி ஜெயமணியையும் கொடூரமாக தாக்கி வீட்டில் இருந்த நகை பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. துரைச்சாமி உயிரிழந்த நிலையில் அவரது மனைவி சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இந்த சம்பவத்தில் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.
கடந்த ஆகஸ்டு மாதம் 31ந்தேதி 2ஆவது சம்பவம் கரியங்காடு தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதியவர்களான முத்துச்சாமி, சாமியாத்தாள் தம்பதியரை கொடூரமாக தாக்கி கொலை செய்து போட்டுவிட்டு , வீட்டில் இருந்து 16 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை களவாடிச்சென்றனர்
இந்த 2 சம்பவங்களின் தொடர்ச்சியாக 3ஆவது சம்பவம், வியாழக்கிழமையன்று, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள குப்புச்சி பாளையம் குச்சிக்காடு தோட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
இங்குள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த சண்முகம், நல்லம்மாள் தம்பதியர் தாக்கப்பட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லம்மாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் சண்முகத்துக்கு சிலிச்சை அளித்தனர். தலையில் கொடூர காயம் ஏற்பட்டு ரத்தம் அதிக அளவில் வெளியேறி இருந்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த கொலை தொடர்பாக மோப்ப நாய்களை கொண்டு தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தினர் போலீசார். கொள்ளை போன நகை பணத்தின் மதிப்பு தெரியவில்லை, சண்முகத்தின் பேத்திக்கு வருகிற 27 ந்தேதி திருமணம் நடக்க இருந்த சூழலில் இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சண்முகத்தின் தோட்டத்து வீட்டிற்கு அருகில் உள்ள உணவக விடுதி உரிமையாளர் வீட்டில் கடந்த மாதம் 13ந்தேதி 60 பவுன் நகைகளும், 9 லட்சம் ரூபாய் பணமும் திருடு போனதாகவும் அந்த சம்பவத்திலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
காற்றுக்காக கதவை திறந்து வைத்துக் கொண்டு அயர்ந்து தூங்கும் முதியவர்களை நோட்டமிட்டு இந்த நொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக கூறப்படும் நிலையில் 5 பேரை கொன்ற கொலையாளிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதே நேரத்தில் தனியாக வசிக்கும் பெற்றோர்களின் நலன் கருதி பிள்ளைகள் தங்கள் வீட்டை சுற்றி சிசிடிவி காமிராக்களை பொருத்துவது பாதுகாப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் காவல் துறையினர்.
Comments