பங்கு வர்த்தகத்தில் சூடு.. மாமியார் கழுத்தில் கத்திவைத்த களவாணி சகோதரிகள்..! நகையை திருடி போலீசில் சிக்கினர்

0 3063

தூத்துக்குடி அருகே மாமியாரை கத்திமுனையில் மிரட்டி நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் தொடர்பாக மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன்மாருக்கு தெரியாமல் பங்கு மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் முதலீடு செய்து நஷ்டமானதால் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கிய களவாணி சகோதரிகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் அன்னை தெரசா நகரை சேர்ந்த பேன்ஸி கடை உரிமையாளர் அற்புதராஜ் என்பவர் வீட்டில் கடந்த 4ம் தேதியன்று பர்தா அணிந்த ஆசாமி கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கத்தியை காட்டி மிரட்டி, அற்புதராஜின் மனைவி, மற்றும் மருமகளின் கைகளை துப்பட்டாவால் கட்டி போட்டு வீட்டில் இருந்து 56 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் மாமியார் செல்வராணி கொள்ளையில் ஈடுபட்டது ஒரு நபர் என்றும் மருமகள் அஸ்வினி பர்தா அணிந்து வந்த இரண்டு நபர்கள் என்றும் முரண்பாடாக கூறியுள்ளனர். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் பர்தா அணிந்த ஒரு நபர் மட்டும் வீட்டுக்குள் வந்து சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் மருமகள் அஸ்வினியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் அனைத்து விபரங்களும் அழிக்கப்பட்டிருந்ததால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பர்தா அணிந்த கொள்ளைக்காரி அம்பலமானார்.

அற்புதராஜின் மகன் தங்கதுரை, மனைவி அஸ்வினியுடன் சென்னை மணப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதும், அஸ்வினி, அதேப்பகுதியில் உள்ள தனது சகோதரி சுசீலாவுடன் இணைந்து பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. கணவருக்கு தெரியாமல் 30 பவுன் நகையை அடமானம் வைத்து பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்த நிலையில் மொத்தமாக 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நகை இல்லாதது குறித்து கேட்ட கணவரிடம், ஏதேதோ காரணம் சொல்லி சமாளித்து வந்த அஸ்வினி, சகோதரி சுசீலாவுடன் சேர்ந்து தூத்துக்குடியில் உள்ள மாமியார் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து, அதனை விற்று 30 பவுன் நகைகளை புதியதாக வாங்கி வைத்து விட திட்டமிட்டுள்ளார்.

கொள்ளை நடந்த வீட்டின் ஒரு பகுதியில் அஸ்வினி பதுக்கி வைத்திருந்த 29 பவுன் நகையை மீட்ட போலீஸார் அஸ்வினியை கைது செய்தனர். தலைமறைவான சகோதரி சுசீலாவை தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்தனர் போலீஸார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments