லாரியை மறிப்பது ஏன்? என்று மேல உள்ள அதிகாரிகிட்ட கேள்வி கேட்க துப்பிருக்கா..? போக்குவரத்து காவலர் அட்ராசிட்டி

0 2253
லாரியை மறிப்பது ஏன்? என்று மேல உள்ள அதிகாரிகிட்ட கேள்வி கேட்க துப்பிருக்கா..? போக்குவரத்து காவலர் அட்ராசிட்டி

சென்னை எண்ணூர் கடற்கரை சாலை சந்திப்பில் துறைமுகம் செல்லும் சாலையில் லாரிகளை மறித்து வைத்திருந்த போக்குவரத்து காவலரிடம், கடற்கரை சாலை காலியாக கிடக்கும் நிலையில் எதற்காக லாரிகளை மறித்து வைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரை, அவதூராக பேசிய காவலர் தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக கூறி காரை மறித்து ரகளையில் ஈடுபட்டார்.

மணலி எம்.எப்.எல் வழியாக துறைமுகம் செல்லும் லாரிகளை 9 பாயிண்டுகளில் மறித்துப்போடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. சம்பவத்தன்று நள்ளிரவு வேளையில் துறைமுகம் செல்லும் லாரிகள் எண்ணூர் சாலை சந்திப்பு பாயிண்டில் மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு காவலர் கருணாகரனும் , சாதாரண உடை அணிந்த இருவரும் நின்றிந்தனர். சில லாரிகளை மட்டும் ஏறிச்செல்ல அனுமதித்ததால் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவலர் கருணாகரனிடம், குறிப்பிட்ட லாரிகளை மட்டும் ஏறிச்செல்ல அனுமதிப்பது ஏன் என்று ? நமது செய்தியாளர் கேள்வி எழுப்பியதும் அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்தார்.

ஆனால் அவர் சொன்னது பொய் என்பதை நிரூபிக்கும் விதமாக 5க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையில் நிற்காமல் ஏறிவர கையும் களவுமாக சிக்கிக் கொண்ட அதிர்ச்சியில் , அந்த லாரி ஓட்டுனர்களை திட்டிக் கொண்டே அவற்றின் நம்பரை செல்போனில் படம் பிடித்தார்.

இதனை நாம் படம் பிடிப்பதை பார்த்ததும், எரிச்சலடைந்த கருணாகரன், எர்ணாவூர் பாயிண்டில் இரு சப் இன்ஸ் பெக்டர்கள் பணியில் இருப்பதாகவும் லாரிகள் ஏரிச்செல்ல அவர்கள் தான் காரணம் என்று கூறினார்.

அந்த லாரிகளை பார்த்து வரிசையில் நின்ற லாரி ஓட்டுனர்கள் பொறுமை இழந்து, போக்குவரத்து காவலரை மீறி கடற்கரை லைனில் வரிசையாக செல்லத்துவங்கினர்.

சரியாக அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் 100க்கும் மேற்பட்ட லாரிகள் அங்கிருந்து துறைமுகம் நோக்கிச்சென்றதால், அந்த இடத்திலும் சரி... கடற்கரை லைனிலும் சரி ஒரு லாரி கூட இல்லை..!

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் கருணாகரன் , செல்போன் மூலமாக வீடியோ எடுத்த படியே , செய்தியாளர் கையில் மேதிரங்கள் அணிந்திருப்பதாகவும், காரில் வந்திருப்பதாகவும் அடையாளங்களை கூறி சிலரை அழைத்தார்.

லாரிகளை மறித்து போடுவது குறித்து மேல அதிகாரத்துல உள்ளவன் கிட்ட கேட்க முடியுமா ? என்றும் செய்தியாளரிடம் கேட்டார் கருணாகரன்.

செய்தியாளர் அவரை மிரட்டியதாக, நடக்காத நிகழ்வை அவதூறாக பேசி அதனை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்.

அங்கிருந்து எர்ணாவூர் சந்திப்பிற்கு சென்று பார்த்து போது, பீச் லைனில் லாரிகள் செல்லவில்லை என்று ஏமாற்றி நூற்றுக்கணக்கான லாரிகளை சப் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மறித்து வைத்திருந்தார்.

செய்தியாளரை பின் தொடர்ந்து வந்த காவலர் கருணாகரன், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வீடியோ எடுத்துக் கொண்டே செய்தியாளரை மிரட்டினார், தான் போனில் அழைத்த மணி என்ற நபருடன் சேர்ந்து செய்தியாளரை தாக்கவும் முயன்றார். செய்தியாளரை காரில் ஏறவிடாமலும் தடுத்தார்.

செய்தியாளர் தனது காரில் ஏறி புறப்பட்ட நிலையில், செய்தியாளரின் காருக்கு முன்பாக நின்று கொண்டு காரை ஓங்கி அடித்து ரகளை செய்தார் காவலர் கருணாகரன்.

இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர் , எண்ணூர் உதவி காவல் ஆணையர் பிரேம்மானந்தத்திற்கு வாட்ஸ் அப்பில் வீடியோக்களுடன் புகார் அளித்துள்ளார். காவலர் கருணாகரன் கூறியபடி , துறைமுகம் செல்லும் லாரிகளை சாலையில் போலீசாரே மறித்து போடுவது குறித்து மேல் அதிகாரியான போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் கேட்ட போது, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், லாரிகளை போலீசார் மறிப்பதாக இதுவரை எந்த ஒரு லாரி உரிமையாளர்களும் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் தானே நேரடியாக ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments