வரி ஏய்ப்பு ரூ.1000 கோடியாம்... 4 வாட்ச் ரூ.2.45 கோடியாம்ப்பா.. கட்டுகட்டாய் 2000 ரூபாய் நோட்டுக்கள்..! ஜெகத்ரட்சகன் வீட்டில் சிக்கியதாக தகவல்
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில் ஈக்காட்டுத்தாங்கலில் அவரது மகளுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் 49 லட்ச ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கைக்கடிகாரம் உட்பட 7 கைக் கடிகாரங்கள் கைப்பற்றப்ட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு 2 கோடியே 45 லட்ச ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகத்ரட்சகன் மகளுக்கு சொந்தமான இந்த கெஸ்ட் ஹவுஸில் மேலும், 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்துவதற்கான அவகாசம் கடந்த 7ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியதாகவும், ஏற்கனவே திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் இருந்து 4 கோடி ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கிடையில், ஜெகத்ரட்சகனின் மருமகன் நாராயணசாமி இளமாறன் Elite distilleries, Panyam cement உட்பட 12 நிறுவனங்களில் இயக்குனராக உள்ள நிலையில் அவரை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டுக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். வருமான வரி துறையின் துணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தினார். ஏற்கனவே வரி துறையின் துணை இயக்குனர் ஒருவர் விசாரணை நடத்திய நிலையில், பெண் அதிகாரியும் விசாரணையில் இணைந்தார்.
இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய மற்ற இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள் 3 சீலிடப்பட்ட கவர்களில் ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மருமகன் நாராயணசாமி இளமாறனிடம் விசாரிக்கப்பட்டது. ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷாவிடமும் வருமானவரித்துறை விசாரணை நடைபெற்றது.
ஜெகத்ரட்சகனின் மகள் ஸ்ரீநிஷா குரோம்பேட்டையில் இயங்கி வரும் பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைவராகவும், தாம்பரத்தில் எஸ்ஆர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, குரோம்பேட்டையில் இயங்கி வரும் குரோம் லெதர் கம்பெனி, சந்திரகலா ரிசார்ட்ஸ் மற்றும் ஹோட்டல், அக்கார்டு டிஃபென்ஸ் உட்பட 21 நிறுவனங்களின் இயக்குனராக உள்ளார்.
இதனிடையே ஜெகத்ரட்சகனின் அலுவலகத்தில் நடந்த சோதனை நிறைவு பெற்று 4 அட்டைப் பெட்டிகளில் பணம், ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். ஒட்டு மொத்தமாக 1000 கோடி ரூபாய் அளவிற்கு ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மொத்தமாக இதுவரை 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments