காசு வாங்கறீங்கல்ல.. ஏன் அடிச்சீங்க பெண் போலீசை ரவுண்டு கட்டிய லாரி ஓட்டுனருக்கு ஆதரவாக குரல்..! மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்

0 4306

எர்ணாவூர் அருகே லாரி ஓட்டுனரை தாக்கிய பெண் காவலருக்கு எதிராக லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால் பெண் போலீஸ் மன்னிப்புகேட்கும்  நிலைக்கு தள்ளப்பட்டார்

சென்னை துறைமுகத்துக்கு பாரம் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுனரை எர்ணாவூர் பாலத்துக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் தாக்கியதாக கூறி அவரை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..!

கடந்த 2 வாரங்களாக சென்னை துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகளை ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட மணலி எம்.எப்.எல், சாத்தாங்காடு, எர்ணாவூர் சந்திப்பு, பார்ம் 13 என்றழைக்கப்படும் கடற்கரைசாலை சந்திப்பு பகுதிகளில் மறித்துபோடுவதாகவும், இதனால் புதன்கிழமை நள்ளிரவு தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் சாலையில் காத்திருப்பதாக சுற்றுவட்டார பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரிசையில் நிற்காமல் ஏறிச் சென்ற லாரி ஓட்டுனரை எர்ணாவூர் சந்திப்பு பகுதியில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது. தாக்கப்பட்ட ஓட்டுனர் தனக்கு நியாயம் வேண்டும் என்று குரல் கொடுக்க தகவல் அறிந்து அங்கு வந்த லாரி உரிமையாளர் சங்கத்தினர் அந்த பெண் போலீசை முற்றுகையிட்டு , ஓட்டுனரை எப்படி தாக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்

வாங்க பேசலாம் என்று நடந்து சென்ற பெண் காவலரோ, டக்கென்று தனது செல்போனில் வீடியோ எடுத்தபடி, தான் யாரையும் தாக்கவில்லை, என்றும் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சட்டம் ஒழுங்கில் புகார் செய்வேன் என்றும் மிரட்டினார்

இதனால் அதிர்ந்து போன அடிவாங்கிய லாரி ஓட்டுனர், வரிசையில் நிற்காமல் துறைமுகம் செல்வதற்கு 1000 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை போக்குவரத்து போலீசாருக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்தார்

ஒருவரை ஒருவர் மாற்றி வீடியோ எடுத்துக் கொண்டே இருந்தனர். பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுனரை தாக்கியது ஏன் ? என்று பெண் போலீஸை கேள்விகளால் ரவுண்டு கட்டிய நிலையில் அங்கு வந்த உதவி காவல் ஆய்வாளர்கள் 2 பேர் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று சமரசம் பேசினர்

நிலமை விபரீதமாவதை உணர்ந்த பெண் போலீஸ் , மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பாக போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமியிடம் கேட்ட போது, அந்த பெண் போலீஸ் மீது லாரியை ஏற்றுவது போல சென்றதால் அவர் லாரியில் ஏறி கையால் ஓட்டுனரை தாக்கியதாகவும் , பின்னர் இருவரும் பரஸ்பரம் சமாதானமாகி சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.

துறைமுகம் செல்லும் லாரிகளை மறித்து போட்டு பணம் வசூல் செய்யும் மணலி மற்றும் எண்ணூர் போக்குவரத்து காவல் துறையினர் மீது ஆவடி காவல் ஆணையர் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments