லாரி வந்து நின்னுச்சி.. அப்பதான் அந்த விபரீதம் வெடித்து சிதறிய பட்டாசுக் கடை..! 14 உயிர்கள் கருகி பலியான சோகம்

0 3124

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் லாரியில் இருந்து பட்டாசுப் பெட்டிகளை இறக்கும் போது பற்றிக்கொண்ட தீயால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி 14 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தைவிட பாதிவிலைக்கு பட்டாசு விற்ற கடை திடீரென தீப்பற்றிக்கொண்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

ஓசூர் பேடரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை மற்றும் குடோன் கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி வளைவு அருகே உள்ளது. சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில் லாரியில் இருந்து பட்டாசுப்பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த போது கடையில் திடீரென தீப்பிடித்தது. சிறிது நேரத்திற்குள் தீ மளமள என்று நாலாபுறமும் பரவியது.

இதைக் கண்டு கடை உரிமையாளர் நவீன் மற்றும் கடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது திகைத்தனர். பட்டாசுகள் வெடித்து சிதற ஆரம்பித்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். சிலர் கடைக்குள் சிக்கிக் கொண்டதால் தப்பிக்க இயலவில்லை.

இந்த தீவிபத்தில் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 7 இரு சக்கர வாகனங்கள், 2 பிக்கப் வேன்கள் மற்றும் ஒரு சரக்கு மினி லாரி ஆகியவை தீயில் கருகி எலும்புக்கூடாகின. பட்டாசுக்கடையின் பக்கத்தில் உள்ள 2 மதுபான கடைகளும், டீக்கடையும் பலத்த சேதம் அடைந்தன.

இந்த தீவிபத்தில் 14 பேர் பலியானதாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசுக் கடைக்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. லாரியில் இருந்து பட்டாசு பெட்டிகளை எடுத்து வைக்கும் போது தீப்பொறி பட்டு தீப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகன நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி போலீசாரும், தமிழக எல்லையில் ஓசூர் சிப்காட் போலீசாரும் போக்கு வரத்தை சீரமைத்தனர்.

தமிழகத்தை விட கர்நாடகாவில் வரி குறைவு என்பதால் பாதிவிலைக்கு பட்டாசு கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் கிருஷ்ணகிரி , ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து பட்டாசு வாங்கிச்செல்வது வழக்கம் என்று கூறப்படுகின்றது. இந்த தீவிபத்து குறித்து விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விபத்தில் இறந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயும் தமிழக அரசு சார்பில் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments