ரூ.11.50 கோடி சிக்கியது எப்படி? ஐ.டி சூட்டை தணிக்க இளநீர் கட்டுகட்டாக சிக்கிய ஆவணங்கள்

0 225781

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவிதா கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலிருந்து கணக்கில்வராத 11 கோடியே 50 லட்சம் ரூபாயை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்ட டி.எம்.கே பைல்ஸில் திமுக எம்பியும் மூத்த நிர்வாகியுமான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219 கோடி சொத்து இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் குண்டைத்தூக்கிப்போட்டார்..

இந்த பரபரப்பு அடங்கும் முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஜெகத்ரட்சனுக்கு 5 மருத்துவக்கல்லூரிகள் இருப்பதாகவும், எங்கே, எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்பது அவருக்கே தெரியாது என்றும் வெளிப்படையாக போட்டுடைத்தார் அமைச்சர் காந்தி..

இப்படி அடுத்தடுத்து “சொத்து” சர்ச்சையில் சிக்கிய ஜெகத்ரட்சகன் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து விசாரிக்க, பூதக்கண்ணாடியுடன் களம் இறங்கியது வருமானவரித்துறை.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், பாரத் பல்கலைகழகத்தின் நிர்வாக அலுவலகம், அக்கார்ட் சர்வதேச பள்ளியின் அலுவலகம் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்துவருகிறது.

ஜெகத்ரட்சகனின் வீட்டில் சிக்கிய ரொக்கத்தை எண்ணுவதற்காக பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டுவந்த அதிகாரிகள், அறையில் வைக்கப்பட்டிருந்த கணக்கில்வராத ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஜெகத்ரட்சகன் வீட்டில், சுவர், கதவு, ஜன்னல் என ஒவ்வொன்றாக பரிசோதித்து ரகசிய அறை உள்ளதா என வருமான வரித்துறை பெண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீட்டின் வளாகத்தில் இரண்டு பெண் அதிகாரிகள் சுற்றி வந்து ஆய்வு செய்தனர். அதில் கதவு, ஜன்னலுக்கு பின்னால் ஏதும் அறை இருக்கிறதா, பராமரிப்பு பணிகளுக்காக புதிதாக பூசப்பட்ட சுவரைத் தட்டி பார்த்து அதில் ரகசிய அறை ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.

மற்ற இடங்களில் உள்ள லாக்கர்களை திறப்பதற்காக, ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை காரில் ஏற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

ஜெகத்ரட்சகனின் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்ஸ் உட்பட 4 சொகுசு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. திடீரென கார்களை திறந்து பார்த்த அதிகாரிகள், அவற்றிலிருந்து ஆவணங்களை கைப்பற்றினர்.

இப்படி ஐடி ரெய்டால் ஏறிய சூட்டை தணிக்க இளநீர் கேட்டு ஜெகத்ரட்சகன் அருந்தியதாக வருமானவரித்துறையினர் கிசுகிசுத்தனர்.

ரெய்டு நடக்கும் தனது வீட்டுக்கு வந்த வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் ஜெனார்த்தனத்தை சிரித்தபடி வாசலில் வந்து ஜெகத்ரட்சகன் வரவேற்ற காட்சிகள் வைரல் ஆகிவருகிறது.

மறுபக்கம், ஈரோட்டில் சவிதா கல்விக்குழுமத்தில் நடந்துவரும் சோதனையில் கணக்கில்வராத ரூ.10 கோடியை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

20 இடங்களிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், கனிணி பதிவுகள் குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்துவருவதாக வருமானவரித்துறையினர் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments