போலீஸா இல்லை பொறுக்கியா..? சிறுமியை காரில் கடத்தி அத்துமீறிய காமுக காக்கிகள் 4 பேர் கைது..! போலீசாக இருந்தாலும் தப்ப முடியாது
திருச்சி முக்கொம்பு பூங்காவிற்கு ஆண் நண்பருடன் சென்ற சிறுமியை காரில் கடத்திச்சென்று அத்துமீறலில் ஈடுபட்ட சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை மடக்கிப்பிடித்து டி.எஸ்.பி அதிரடியாக கைது செய்தார். போக்சோவில் போலீசாரை சிக்கவைத்த சிசிடிவி காட்சிகளுடன் விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவிரிக்கரையில் அமைந்துள்ள முக்கொம்பு பூங்காவுக்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளும், பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் தங்கள் நண்பர்களுடன் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை 17 வயது சிறுமி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சென்றிருந்தார்
அப்போது அங்கு மது போதையில் நின்றிருந்த தனிப்படை உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் அந்த ஜோடியை அழைத்து விசாரித்தனர்.
அப்போது சசிகுமார் அந்த சிறுமியின் ஆண் நண்பரிடம் கஞ்சா விற்பவன் போல் உள்ளாயே, உன்னிடம் விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால் , அவரை அவதூறாக பேசி செல்போனில் படம் பிடித்துள்ளார் காவலர் பிரசாத்
அந்த சிறுமி சத்தம் போட்டதால் அவரை விசாரிக்க வேண்டும் என்று அங்கு நின்ற சிவப்பு நிறம் கொண்ட காரில் ஏற்றி அடைத்து அவரை 4 போலீசாரும் வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றுள்ளனர்.
இதனால் பதறிபோன அந்த ஆண் நண்பர் காவல் துறையின் அவசர உதவி எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி பாரதி தாசன் தனது காரில் விரைந்து சென்று கரூரில் சுற்றிய போதை போலீசாரின் காரை அதிரடியாக மடக்கிப்பிடித்து அந்த சிறுமியை மீட்டுள்ளார். காரில் சென்ற போது போதை போலீசார் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அந்த சிறுமி புகார் அளித்தார்.
சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் அந்த சிறுமியிடமும் இளைஞரிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். பூங்காவில் இருந்த சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது . இதில் பணிக்கு சேர்ந்து 6 மாதங்களேயான ஜீயபுரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சசிக்குமார், தண்டனை கால விடுப்பில் உள்ள நவல் பட்டு காவலர் பிரசாத், துவாக்குடி காவலர் சித்தார்த், வாகன ரோந்து காவலர் சங்கரபாண்டி ஆகியோர் மது அருந்திவிட்டு சிறுமியிடம் செய்த அத்துமீறல் உறுதியனதால் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
காமுக போலீசார் 4 பேர் மீதும் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் pocso உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமியிடம் அத்துமீறியவர்கள் போலீசார் என்று தெரிந்ததும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடதக்கது.
Comments