700 அதிகாரிகள்... 90 இடங்கள்... சல்லடைப்போட்ட ஐ.டி காலையிலேயே துவங்கியது ரெய்டு... தி.மு.க. நிர்வாகி ஜெகத்ரட்சகன் வீட்டிலும் ரெய்டு...
வரி ஏய்ப்பு புகாரில் தி.மு.க., எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அவரது உறவினர் வீடுகள் உள்பட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 50 இடங்களிலும், சவிதா மருத்துவக் கல்லூரி உரிமையாளர் வீரய்யனுக்கு சொந்தமான 40 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் மற்றும் சவிதா கல்வி குழுமத்தில், மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கல்விக் கட்டணம், நன்கொடையில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மொத்தம் 90 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அடையாறு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகளில் காலை நேரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தியாகராய நகரில் உள்ள அக்கார்டு நட்சத்திர விடுதியில் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறையினர், ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை வெளியே அனுமதிக்காததோடு, சலவைக்கு வைக்கப்பட்டிருந்த துணிகளிலும் ஆய்வினை நடத்தினர்.
குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை, பள்ளிகரணையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரியில் உள்ள லட்சுமி நாராயணன் மருத்துவ கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் உள்ள கால்டா சமுத்திர நட்சத்திர விடுதி, அமைந்தகரையில் உள்ள ஆடிட்டர் ராம்குமார் வீடு, காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தில் உள்ள மதுபான ஆலை, ஜெகத்ரட்சகனுக்கு நெருக்கமானவர்களின் இடங்கள் என 50 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளிலும் வருமான வரித்துறை சோதனை நடந்திய நிலையில், 2020ஆம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்ற புகாரில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி 89 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கி வைத்துள்ளனர்.
சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா கல்வி குழும உரிமையாளர் வீரய்யன் வீடு,
தண்டலத்தில் செயல்படும் சவிதா மருத்துவ குழுமம், கல்வி நிறுவனத்தின் ஆடிட்டர் வீடு, ஈரோட்டில் உள்ள வீடு உள்பட 45 இடங்களில் 300க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
Comments