கேதார்நாத் சிவ சிவ சம்போ.. இல்லாத ஹெலிகாப்டருக்கு 10 லட்சம் ரூபாய் அம்போ....! உத்தரகாண்ட் போறீங்களா உஷார்
தமிழகத்தின் சென்னை, சிதம்பரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து கேதர்நாத் கோவிலுக்கு சென்ற 200 பக்தர்களிடம், மலையேற்றத்தை தவிர்த்து ஹெலிகாப்டர் மூலம் கோவிலுக்கு அழைத்துச்செல்வதாக கூறி ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணத்தை வசூலித்து மர்ம கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது.
காடு... மலை.. பனி.. பள்ளத்தாக்குகளை எல்லாம் தாண்டி சிவ சிவ சம்போவை வணங்க சென்று ... போலி ஹெலிகாப்டர் டிக்கெட்டுக்கு 10 லட்சம் ரூபாயை பறிகொடுத்து விட்டு அம்போவென அமர்ந்துள்ள தமிழக பக்தர்கள் இவர்கள் தான்..!
உத்தரகாண்ட் மாநிலத்தில், இமாலய மலை தொடரில் அமைந்துள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு கோவில்களும் தங்கள் வாழ்நாளில் வழிபட வேண்டிய முக்கியமான புனித தலங்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
சார்தாம் யாத்ரா என அழைக்கப்படும் இந்த யாத்திரை கோடை காலத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும். பனி காலத்தில் இந்த கோவில்கள் மூடப்பட்டிருக்கும். வருடத்தில் 6 மாதங்களில் மட்டுமே திறந்திருக்கும் இந்த கோவிலில் சிவபெருமானை வழிபட இந்திய முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.
இதில் கேதார்நாத் கோவிலுக்கு கௌரிகுந் பகுதியில் இருந்து 16 கி.மீ மலையேற்றம் செய்து செல்ல வேண்டும். முதியவர்கள், மலையேற்றம் செய்ய முடியாதவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அல்லது டோலி மூலம் செல்லவேண்டும். இதில் ஹெலிகாப்டர் மூலம் கோவிலுக்கு செல்லவிரும்பும் வெளிமாநில பக்தர்களை போலி டிக்கெட் மூலம் மர்ம கும்பல் ஒன்று ஏமாற்றிவருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, சிதம்பரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்ற 200 க்கும் மேற்பட்டோர் இந்த கும்பலிடம் தலா 5498 ரூபாய் என்ற விதத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பறிகொடுத்து உள்ளனர். இதில் ஏமாற்றப்பட்ட தமிழ்நாடு பக்தர்களுக்கு தாங்கள் ஏமற்றப்பட்டதே ஹெலிகாப்டரில் பறப்பதற்காக வரிசையில் காத்திருக்கும் வரை தெரியாது என்பது தான் ஏமாற்றிய கும்பலின் தொழில் நேர்த்தி.
QR CODE, ஹெலிகாப்டரில் பயணம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் உண்மையான டிக்கெட் போலவே அனுப்பிய போலி டிக்கெட்டை நம்பி ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வரிசையில் காத்திருந்த தமிழ்நாடு பக்தர்களின் டிக்கெட்டை பரிசோதித்த ஹெலிகாப்டர் நிறுவனத்தினர். இது போலியான டிக்கெட் இது செல்லாது என்று கூறியதும், தாங்கள் ஏமாற்ற பட்டுள்ளதை உணர்ந்துள்ளனர். அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது தங்களை போலவே நீண்ட நாட்களாக போலியான டிக்கெட் மூலம் பலர் ஏமாற்றப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து முறையான புகார் அளிக்க முயற்சி செய்த போது எந்த மாநிலத்தை சேர்ந்தவரோ அந்த மாநில காவல்துறையில் புகார் அளிக்கும் படி அங்கிருந்த அதிகாரிகள் கூறவே முறையான புகார் கூட வழங்க முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Google Pay, Online Payment, வங்கி கணக்குகள் மூலம் பணம் பெற்று பக்தர்களை ஏமாற்றும் இந்த கும்பலை கைது செய்ய வேண்டும்என கோரிக்கை விடுத்தனர். அதே நேரத்தில் கேதார்நாத் செல்ல Himalayan Heli service PVT LTD என்ற நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சேவையை பயன்படுத்த உத்தரகண்ட் அரசின் சுற்றுலாத்துறை வலைதளத்தில் யாத்திரை செல்வதற்கு பதிவு செய்தவர்கள் மட்டுமே, IRCTC இணையதளத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் போலியான டிக்கெட் கொடுத்து ஏமாற்றுபவர்களிடம் உஷாராக இருக்கும்படியும் காவல் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
Comments