கந்து வட்டியால் தூக்கில் தொங்கிய 3 பெண் குழந்தைகளின் தந்தை! பரோல் கைதியின் பகீர் மிரட்டல்!!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கந்து வட்டி விவகாரம் தொடர்பாக பரோலில் வெளி வந்த ஆயுள் தண்டனை கைதி விடுத்த மிரட்டலுக்குப் பயந்து 3 பெண் குழந்தைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் சின்ன காலனியைச் சேர்ந்தவர் 34 வயதான கதிரவன். அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் கூலி வேலை பார்க்கும் கதிரவனுக்கு மணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1-ஆம் தேதியன்று கதிரவன் தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய கழுகுமலை போலீசார் கதிரவனின் செல்போனை ஆய்வு செய்த போது திடுக்கிட வைக்கும் தகவல்கள் கிடைத்தன.
கதிரவனின் செல்ஃபோனில் உள்ள குரல் பதிவு ஒன்றில், நடராஜன் என்ற நபர் கதிரவனை மிரட்டியது பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. யார் அந்த நடராஜன் என்று போலீசார் விசாரித்த போது, கொலை வழக்கு ஒன்றில் 2009-இல் ஆயுள் தண்டனை பெற்ற கைதி அவர் என்று தெரியவந்தது. கழுகுமலையைச் சேர்ந்த நடராஜனின் மனைவி மாணிக்கம், கந்து வட்டி விடும் தொழிலில் ஈடுபட்டு வந்ததையும் அவரிடம் தற்கொலை செய்து கொண்ட கதிரவன் 8 ஆண்டுகளுக்கு முன் தமது இரட்டை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக 5000 ரூபாய் கந்து வட்டிக்கு வாங்கியதையும் போலீசார் அறிந்து கொண்டனர்.
5000 ரூபாய் அசலுக்கு வாரந்தோறும் 500 ரூபாய் வட்டியாக கொடுத்து வந்த நிலையில், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு கதிரவன் சரிவர வட்டி கொடுக்கவில்லை எனவும், இதனால் வட்டி குட்டி போட்டு 16 ஆயிரம் ரூபாயாக சேர்ந்து விட்டதாகவும் மாணிக்கம் கூறியுள்ளார்.
மாணிக்கத்தின் கணவர் நடராஜன் செப்டம்பர் 17-ஆம் தேதி பரோலில் வெளியே வந்த நிலையில், சில நாட்களுக்கு முன் கதிரவனை அவர் வேலைக்கு போகும் வழியில் மடக்கி நிறுத்தி 16 ஆயிரம் ரூபாய் கந்து வட்டி பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இருந்த கதிரவன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்துக் கொண்டே பதிலளித்ததாக கூறப்படுகிறது. அதை அவமரியாதையாக எடுத்துக் கொண்ட நடராஜன், கதிரவனை சாதி ரீதியாகவும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக செல்ஃபோன் குரல் பதிவு மூலம் போலீசார் தெரிந்து கொண்டனர்.
Comments