கொல்லப்படும் கர்ப்பிணிகள்.. ராஜாஜி மருத்துவமனைக்கு செல்வதற்கே அஞ்சும் நிலமை..! கலெக்டரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் திடுக் தகவல்
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அடுத்தடுத்து இரு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில், இறந்த பெண்ணுக்கு இரு தினங்கள் செயற்கை சுவாசம் அளித்து அந்த பெண் டெங்குவால் இறந்தது போல மருத்துவ ஆவணங்களை திருத்தியது, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சமர்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் பிறப்பிடமாக விளங்கும் அரசு ராஜாஜி மருத்துவமனையின் பிரசவ வார்டு மருத்துவர்களின் பொறுப்பற்ற செயல்களால் பிரசவத்துக்காக பெண்கள் சேர்வதற்கே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகாட்சி சுகாதார செவிலியர்கள் தெரிவித்த பகிரங்க குற்றச்சாட்டுக்கள் தான் இவை..!
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரசவத்துக்கு பின்னர் மருத்துவர்களின் சிகிச்சை குறைபாட்டால் உயிரிழக்கும் தாய்மார்களை, டெங்கு காரணமாக ரத்தபோக்கு ஏற்பட்டதாக தவறாக கூறுவதாகவும் புகார் தெரிவித்திருந்தனர்.
கடந்த மாதம் 2ஆம் தேதி செம்மலர், 5ஆம் தேதி குப்பி ஆகிய இரு பிரசவித்த தாய்மார்கள் அடுத்தடுத்து பலியான நிலையில் உறவினர்களின் புகாரின் பேரில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகர சுகாதாரத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி விசாரித்து அளிக்கப்பட்ட அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பிரசவத்திற்கு பின்னர் ஆகஸ்ட்31ந் தேதி சிகிச்சை குறைப்பாட்டால் உயிரிழந்த செம்மலர் என்ற பெண்ணுக்கு தலைமை மருத்துவர் உத்தரவுபடி வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு உயிரோடு இருப்பது போன்று சிகிச்சை அளித்ததாக கூறப்பட்டுள்ளது. 1ந்தேதி அவருக்கு இருதய நோய்க்கான சிகிச்சை அளித்ததாகவும், டெங்கு காய்ச்சலால் இறந்தது போன்று ஆரம்பத்தில் இருந்து ஒட்டு மொத்தமாக அனைத்து மருத்துவ ஆவணங்களையும் திருத்தி உள்ளதாகவும், இருதினங்கள் கழித்து 2ந்தேதி உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் தெரிவித்ததாகவும், விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே போல 5ந்தேதி பலியான குப்பி என்ற பெண்ணின் மருத்துவ ஆவணங்களிலும் சில தவறுகள் நிகழ்ந்திருப்பதாக, விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிர்பலியை மறைக்க டெங்கு காய்ச்சலை கையில் எடுத்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை மறுத்துள்ள அரசு மருத்துவர் சங்க தலைவர் செந்தில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற சிகிச்சை குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கை அளித்ததை ஏற்க முடியாது என்றார்.
இரு உயிரிழப்புக்கள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின் பேரில் விசாரித்து அறிக்கை அளித்த மதுரை மாநகராட்சி சுகாதார அதிகாரி வினோத்தை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அக்டோபர் 3ஆம் தேதி முதல் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நடைபெறும் அனைத்து அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளையும், குடும்ப நல அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
Comments