மகாராஷ்டிராவில் நான்டெட் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்ததற்கு உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு இல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது.
சத்ரபதி சம்பாஜிராவ் நகர் அருகில் உள்ள டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 நோயாளிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இல்லாதது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய அவர், ஹாஃப்கைன் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட வேண்டிய சில மருந்துகள் பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக வாங்கவில்லை என்றும், அதனால் சிக்கல் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பா.ஜ.க அரசு தனது விளம்பரத்திற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கிறது, ஆனால் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க பணமில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பாஜகவின் பார்வையில் ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
Comments