அண்டை மாநிலத்துக்கு தண்ணீர் தராததால் சில மாநிலங்களில் பிரச்சினைகள் நிலவுகின்றன : பிரதமர் மறைமுக தாக்கு
நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்த மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் சித்தோர்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய பிரதமர், எல்லையோர கிராமங்கள் வளர்ச்சிபெறும் நோக்கில் துடிப்பான கிராமங்கள் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படுவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டத்தில் பங்கேற்க திறந்த காரில் சென்ற பிரதமருக்கு இரு மருங்கிலும் திரண்டு மக்கள் வரவேற்பளித்தனர்.
கூட்டத்தில் பேசிய பிரதமர், காவிரி விவகாரம் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டு, அண்டை மாநிலத்துக்கு தண்ணீர் தராததால் சில மாநிலங்களில் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், குஜராத் முதலமைச்சராக தாம் இருந்தபோது நீதிமன்ற விவகாரங்கள் ஏதுமின்றி ராஜஸ்தானுக்கு தண்ணீர் திறந்ததாகவும் கூறினார். இடஒதுக்கீட்டின் மூலம் பெண்களுக்கு உரிமைகள் கிடைப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பாததால் சாதி, மதத்தின் பெயரில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் விமர்சித்தார்.
முன்னதாக, சித்தோர்கரில் பிரசித்தி பெற்ற சன்வாலியா சேத் கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் வழிபாடு செய்தார்.
Comments