எப்படிடா கேள்வி கேட்ப..? விவசாயியை ஏறி மிதித்து ஊராட்சி செயலர் அட்டூழியம்..! எம்.எல்.ஏ முன்னிலையில் தாக்குதல்

0 3684
எப்படிடா கேள்வி கேட்ப..? விவசாயியை ஏறி மிதித்து ஊராட்சி செயலர் அட்டூழியம்..! எம்.எல்.ஏ முன்னிலையில் தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சியில், அகிம்சாமூர்த்தி காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடந்த கிராமசபைக்கூட்டத்தில் எம்.எல்.ஏ முன்னிலையில் கேள்வி எழுப்பிய விவசாயியை ஊராட்சி செயலர் காலால் ஏறி மிதித்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராமசபைக்கூட்டத்தில், விவசாயி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க இயலாமல் ஆத்திரத்தில் விவசாயியை காலால் ஏறி மிதித்து தாக்கிய காட்சிகள் தான் இவை..!

மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்கா குளம் கிராமத்தில் உள்ள கோயிலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மான்ராஜ் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேப்பங்குளத்தை சேர்ந்த அம்மையப்பன் என்ற விவசாயி, ஊராட்சியில் உள்ள கிராமங்களில் சுழற்சி முறையில் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என உள்ளாட்சித் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் கடந்த முறை நடந்த அதே இடத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்தனர். ஒரே இடத்தில் கூட்டம் நடப்பதால், பிற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க இயலாத சிரமத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டினார் அம்மையப்பன், அதற்கு ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், கடந்த கூட்டத்திற்கு நீ ஏன் வரவில்லை? என்று ஆவேசமாக கேட்டார்

அதன் தொடர்ச்சியாக பேசிய விவசாயி அம்மையப்பன், ஆகஸ்ட் 17-ம் தேதி ஊராட்சி தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிற்கு பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார்

இதனால் ஆத்திரம் அடைந்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் எழுந்து வந்து, தரையில் அமர்ந்திருந்த விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். அவரது ஆதரவாளர்கள் அம்மையப்பனை சூழ்ந்து கடுமையாக தாக்கினர்.

தான் நீதிமன்ற உத்தரவு பெற்று பணியில் தொடர்வதாகவும் என்னை பற்றி கிராமசபை கூட்டத்தில் எப்படி பேசலாம் என்று கேட்டு அம்மையப்பனை தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போது புகார் அளித்தவரை எப்படி தாக்கலாம் என்று கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எம்.எல்.ஏ மான்ராஜ், பிடிஓ முன்னிலையில் ரவுடி போல ஊராட்சி செயலர் தாக்குதலில் ஈடுபட்டது அருகில் இருந்த பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாக்குதலில் காயம் அடைந்த விவசாயி அம்மையப்பன் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தலைமறைவான ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடிவரும் நிலையில் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments