ஆட்டோவை திருடி வழிப்பறி... பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய சிறை நட்பு திருடர்கள்...!

0 1600
ஆட்டோவை திருடி வழிப்பறி... பெட்ரோல் தீர்ந்ததால் சிக்கிய சிறை நட்பு திருடர்கள்...!

திருட்டு ஆட்டோவில் சென்னை முழுவதும் சுற்றிச் சுற்றி வழிப்பறி செய்து வந்த 2 பேர், திருட்டில் அடுத்த கட்டத்துக்கு போக நினைத்து, திறந்து கிடந்த அலுவலகத்துக்குள் புகுந்து லேப் டாப்பை எடுத்துச் செல்ல முற்பட்ட போது போலீசில் வசமாக சிக்கினர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்த போது ஏற்பட்ட நட்பு இருவரையும் திருத்தாமல் அடுத்தடுத்த குற்றச் செயல்களில் ஈடுபட துணிய வைத்தது பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் இயங்கி வரும் கேரளா ஆயுர்வேத வைத்திய சாலையின் இரண்டாம் தளத்தில் வாசல் கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர், அங்கு பணியாற்றும் சிலர். நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர், கால் இடறி தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது விழந்ததால் பணியாளர்கள் விழித்துக் கொண்டனர். உடனே மர்ம நபர் சுதாரித்து எழுந்து, மொட்டை மாடி வழியாக தாவிக் குதித்து ஓட, பணியாளர்கள் துரத்திச் சென்று மடக்கினர். அவரது கையில் வைத்திய சாலையின் லேப்டாப் மற்றும் செல்போன் இருந்ததைப் பார்த்து மர்ம நபர் திருட வந்ததை உறுதி செய்த பணியாளர்கள், அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த பீர்க்கங்கரணை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மர்ம நபரிடம் விசாரித்த போது, தனது நண்பன் ஒருவன் ஆட்டோவில் காத்துக் கொண்டிருப்பதாக போலீசாரிடம் கூறியுள்ளார். உடனே, சிறிது தூரத்தில் ஆட்டோவோடு காத்திருந்த அந்த நண்பனையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர் போலீஸார். வைத்திய சாலையில் பிடிபட்ட நபர், படப்பை வஞ்சுவான்சேரியைச் சேர்ந்த சூர்யா என்பதும், அவரது நண்பன் சின்மயா நகரைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் தங்களின் தரவு தளத்தில் தேடிய போது, இருவர் மீதும் வேறு எந்த காவல் நிலையத்திலும் குற்ற வழக்குகள் இல்லை என தெரியவந்தது. எனினும், இருவரையும் தனித்தனி அறையில் வைத்து போலீசார் விசாரித்த போது பல உண்மைகள் வெளியே வந்தன.

சிறு வயதில் திருட்டில் ஈடுபட்டதற்காக சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த தங்கள் இருவருக்கும் அங்கே நட்பு ஏற்பட்டதாகவும், தண்டனைக் காலம் முடிந்து வெளியில் வந்ததும் சிறு சிறு கொள்ளைகளில் ஈடுபட்டு சிக்காமல் சுற்றி வந்தாகவும் இருவரும் தெரிவித்தனர். 2 மாதத்திற்கு முன்பு கோயம்பேட்டில் புஷ்பராஜ் ஆட்டோ ஒன்றை திருடி, அதில் சென்னை முழுவதும் வலம் வந்த இருவரும் தனியாக நடந்துச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்களை பறித்து விற்று வந்ததாகவும் கூறினர்.

அடுத்த வழிப்பறியில் ஈடுபடுவதற்காக பெருங்களத்தூர் பகுதியில் சுற்றித் திரிந்த போது ஆட்டோவில் பெட்ரோல் தீர்ந்ததால் சாலையில் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் இருவரும் சேர்ந்து பெட்ரோல் திருடியுள்ளனர். அருகே இருந்த கட்டிடத்தின் மாடியில் வாசல் கதவு திறந்து இருப்பதை பார்த்ததும், அங்குச் சென்று கைவரிசை காட்டலாம் என நினைத்து வைத்திய சாலைக்குள் நுழைந்ததால் இருவரும் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தனர் போலீஸார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments