கீதாஞ்சலி பள்ளிக்கூடம் அவரோட உயிரை திருப்பிக் கொடுக்குமா ? வேகத்தடையால் விபரீத பலி

0 2982

கோவை பீளமேடு கொடீசியா அருகே கீதாஞ்சலி என்ற தனியார் பள்ளி நிர்வாகம் அமைத்த வேகத்தடையால், இருசக்கரவாகன ஓட்டி சாலையில் தூக்கி வீசப்பட்டு பலியான நிலையில், இரவோடு இரவாக வேகத்தடை அகற்றப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் மீது விபத்துக்கு காரணமானதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை பீளமேடு கொடிசியா அருகே கீதாஞ்சலி சிபிஎஸ்சி மேல் நிலை பள்ளிக்கூடம் உள்ளது. அழகிரிசாமி என்பவரை தாளாளராக கொண்டு இயங்கும் இந்த பள்ளிக்கூடத்தின் வாசலில் ஏற்கனவே ஒரு வேகத்தடை உள்ள நிலையில், மாநகராட்சியின் அனுமதி பெறாமல் சாலையை மறித்து புதிதாக வேகத்தடை ஒன்றை அமைத்துள்ளனர். அந்த வேகத்தடையில் பிரதிபலிப்பானோ, வெள்ளை நிற பெயிண்டோ அடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9:30 மணிக்கு இந்த சாலை வழியாக, இரு சக்கரவாகனத்தில் சென்ற அரசூர் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சந்திரகாந்த் என்பவர் புதிய வேகத்தடையில் மோதி தூக்கி வீசப்பட்டார், தலைக்கவசம் அணிந்திருந்தும்,  தலைக்கவசத்துடன் செங்குத்தாக சாலையில் மோதிய வேகத்தில் கழுத்து முறிந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இளைஞர் பலியான தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு பிணக்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை தொடர்ந்து அந்த வேகத்தடைக்கு வேக வேகமாக வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்டது.

அது அனுமதி பெறாத வேகத்தடை என்பதால் இரவோடு இரவாக அதனை வெட்டி அகற்றினர் இதனால் அந்த சாலை சேதமானது.

இதற்க்கிடையே தங்கள் அனுமதி பெறாமல் சாலையில் வேகத்தடை அமைத்தது தொடர்பாக கீதாஞ்சலி பள்ளி நிர்வாகத்துக்கு கோவை மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அரசு அனுமதியின்று வேகத்தடை அமைத்து உயிர்பலி நிகழ காரணமாக இருந்ததாக பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

பள்ளிக்குழந்தைகளின் நலன் கருதி வேகத்தடை அமைத்த பள்ளி நிர்வாகம் பொறுப்பாக அதில் வெள்ளை பெயிண்ட் அடித்திருந்தாலோ, வேகத்தடை அருகில் உள்ளது என்ற எச்சரிக்கை அறிவிப்பு வைத்திருந்தாலோ இது போன்ற அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது என்கின்றனர் போலீசார். இதற்கிடையே போலீசார் முறையாக வழக்கு பதியாமல் தங்களை அலைக்கழிப்பதாக சந்திரகாந்தின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

செய்திகளை மேலும் அறிய எங்களது வாட்ஸ் ஆப் லிங்கை கிளிக் செய்து இணையவும்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments