மறக்க முடியுமா அந்த மகா நடிகனை..!! நடிப்பிற்கோர் நடிகர் திலகம்..! 50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களுடன் நடித்த சிவாஜிகணேசன்

0 4490

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முத்திரை பதித்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு இன்று 96-வது பிறந்தநாள். உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்ட நடிகர்திலகத்தைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு..

சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் நாடகத்தில் நடித்ததால், சிவாஜி கணேசன் என்ற பெயருடன் பராசக்தி மூலம் திரையுலகில் கால்பதித்தவர் நடிகர் திலகம். தனது முதல்படத்திலேயே கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு சிறப்பான வசன உச்சரிப்பால் உயிர்கொடுத்தவர் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்..

புராணப் பாத்திரங்களோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களோ எதையும் ஏற்று நடிப்பதில் தன்னிகரற்று விளங்கியவர் சிவாஜி. திருமால், சிவபெருமான், அப்பர், நாரதர், வீரபாகு, கர்ணன் போன்ற வேடங்கள் அவருக்கு பொருத்தமாக அமைந்திருந்தன.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், பகத்சிங், கொடிகாத்த குமரன், பாரதியார் போன்ற சுதந்திரப்போராட்ட தியாகிகளை தன்னுடைய நடிப்பால் மக்கள் மனதில் விதைத்த வித்தகர் செவாலியே சிவாஜி கணேசன்.

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான சிவாஜி படங்கள்தான் எத்தனை எத்தனை. தந்தையாக, அண்ணனாக, குடும்பத் தலைவனாக, நண்பனாக, நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் நடிகர்திலகம்.

அதிகப்படியான நடிப்பை மட்டுமல்ல, யதார்த்தமான நடிப்பையும் தம்மால் வழங்கமுடியும் என கலைரசிகர்களுக்கு முதல்மரியாதை செய்தார் சிவாஜி..

50 ஆண்டுகளில் நான்குதலைமுறை நடிகர்களோடு நடித்தபோதும் சரி, எண்ணற்ற இயக்குநர்கள் இயக்கியபோதும் சரி, கடைசிப்படம் வரை தனது தனித்தன்மையை தக்கவைத்துக் கொண்டவர் சிவாஜிகணேசன்.

தாதா சாகேப் பால்கே, பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சிவாஜிகணேசன் நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம் என்றால் அது மிகையல்ல..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments