தங்கச்சி கொள்ளைக்காரி.. அக்கா பதுக்கல் ராணி.. அசத்தலாக தூக்கிய போலீஸ்..! சிசிடிவி மட்டும் இருந்தா சக்சஸ் தான்

0 2574

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 18 சவரன் நகைகள் களவாடப்பட்ட சம்பவத்தில் ஆந்திர கொள்ளைக்காரியை கைது செய்த போலீசார், மண்ணில் புதைக்கப்பட்ட நகைகளை மீட்கும் காட்சி வெளியாகி உள்ளது.

அங்குலம் அங்குலமாக ஒவ்வொருவரையும்... சல்லடைப்போட்டு பேருந்தையும் தீவிரமாக சோதனை செய்தும் பறிபோன தனது 18 சவரன் நகைகள் கிடைக்காத கவலையில் பெண் கண்ணீர் விடும் இந்த சம்பவத்தில் தான் போலீசார் திறமையாக துப்புத்துலக்கி உள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சுடர்மணி என்பவரின் மனைவி சத்யா. இவர் கடந்த 27-ஆம் தேதி மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்தில் ஏறும்போது அவரது கைப்பையில் வைத்திருந்த 18 சவரன் தங்க நகைகள் களவு போனது. நகை களவு போன விபரம் அறிந்த சத்யா உடனடியாக சுதாரித்துக் கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பேருந்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அதிலிருந்து பயணிகளிடம் பரிசோதனை செய்தும் நகைகள் கிடைக்கவில்லை.

பேருந்து நிலையப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட பேருந்து, மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது, அனைவரும் பேருந்தில் ஏற முயற்சிக்கும்போது, ஒரு பெண் மட்டும் தன் குழந்தையுடன் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் பேருந்தில் இருந்து இறங்குவது தெரியவந்தது. இதையடுத்து, அதற்கு முந்தைய சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது சம்பந்தப்பட்ட பெண் 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறி இறங்குவது தெரியவந்தது.

பேருந்தில் பிச்சை எடுப்பவர் போன்ற தோற்றத்தில் இருந்த அந்தப் பெண் குறித்த விபரங்களை சேகரித்தபோது, அந்தப் பெண் உள்ளிட்ட சிலர் கடலூர் மாவட்டம் முட்லூர் பகுதியில் குழுவாக தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய போது, ஒரு பெண், சம்பவ இடத்தில் அணிந்திருந்த அதே சேலை, ஜாக்கெட்டுடன் சாலை ஓரம் அமர்ந்திருந்ததை கண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்தப் பெண் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சிறுதானூர், முள்ளுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜு என்பவரின் மனைவி துர்கா என்பதும், ஆந்திராவில் இருந்து ஒரு குழுவாக வந்து இங்கு தங்கி திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

சம்பவத்தன்று பேருந்தில் ஏறுவதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்த சத்யாவின் கைப்பையில் இருந்த 18 சவரன் நகைகளை கூட்டத்தை பயன்படுத்தி திருடியதும் , அதில் நகை இருந்ததை கண்டு உடனடியாக அந்த நகைகளை ஆந்திராவில் தனது சொந்த ஊரில் உள்ள சகோதரிக்கு கொடுத்து அனுப்பி வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நகைக் கொள்ளைக்காரி துர்காவை கைது செய்த போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர். துர்காவின் சகோதரியின் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்டு, மயிலாடுதுறை தனிப்படை போலீசார் 8 பேர், டெம்போ வேனில் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்து துர்காவின் சொந்த ஊருக்கு சென்றனர்.

அங்கு, தங்களது நடமாட்டத்தை உணர்ந்து தப்பி ஓட முயன்ற துர்காவின் சகோதரியை மடக்கி பிடித்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் வீட்டுக்கு சிறிது தூரத்தில், முள் காட்டிற்குள் மண்ணில் பள்ளம் தோண்டி பதுக்கி வைத்திருந்த திருட்டு நகைகளை துர்காவின் சகோதரி சனிக்கிழமை காலை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் திருட்டு போன நகைகளை 3 நாட்களாக கண்கொத்தி பாம்பாக கண்காணித்து, ஆந்திராவிற்கு சென்று மீட்டு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் , தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments