காவிரி விவகாரத்தில் ரஜினி கள்ளமவுனமா..? சிவராஜ் குமார் கண்டனம்..! ஆதங்கத்தில் ரஜினி ரசிகர்கள்
காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கள்ள மவுனம் காப்பதாக வி.சி.கவின் வன்னியரசு குற்றஞ்சாட்டிய நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டுகேட்ட திருமாவளவன் எப்போது பேசுவார் என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
காவிரி நதி நீர் விவகாரத்தை காரணம் காட்டி பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கன்னடனாக தான் மன்னிப்பு கோருவதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய ரஜினிகாந்த் கள்ள மவுனம் காப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, சூப்பர் ஸ்டார் ரஜினியா பிரகாஷ் ராஜா? என்று எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார் .
வன்னியரசுவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருமாவளவன், காவிரி நீர் தரமறுக்கும் கர்நாடகாவை எதிர்த்து எப்போது வாய் திறப்பார், என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள் ரஜினி ரசிகர்கள்.
தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்காமல் ரஜினியை குறிப்பிட்டு கேள்வி கேட்பதன் உள்நோக்கம் என்ன என்றும் கேட்டுள்ளனர்.
கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜ் கோஷ்டியினர் ரஜினிக்கு எதிராக அவரது படத்தை எரித்து கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கம் போல காவிரி நதி நீர் பிரச்சனையில் தமிழகத்திலும் ரஜினியை வம்புக்கு இழுக்கும் வேலைகள் துவங்கி விட்டதாகவும், கன்னடனுக்குத் தெரிந்த ஒரே தமிழன் ரஜினி என்றும், தமிழனுக்கு தெரிந்த ஒரே கன்னடன் ரஜினி என்றும் இருவரும் மாறி மாறி அவரை வைத்து அரசியல் செய்வதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முடிவைக் கண்டித்து கர்நாடக நடிகர்கள் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்தில் பங்கேற்ற ஜெயிலர் புகழ் சிவராஜ் குமார், பெங்களூருவில் நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி, ரத்து செய்ய சொன்னது தவறு என்றும் அதற்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
திரையுலகினர் தங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் விதத்தில் கருத்து தெரிவித்தாலும் இடையில் கிடக்கின்ற சில அரசியல்வாதிகள் காவிரி விவகாரத்தில் குளிர்காய நினைப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments