புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?

0 2153

தூத்துக்குடி அடுத்த முள்ளக்காட்டில் உள்ள ஆதிரா கேக் ஷாப்பில் வாங்கிய கேக் ஊசிபோயிருந்ததால் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், மயிலாடுதுறை அய்யாங்கார் பேக்கரியில் வாங்கிய பிறந்த நாள் கேக்கில் புழுக்கள் நெழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசை ஆசையாக தங்கள் வீட்டு பிள்ளையின் பிறந்த நாளுக்கு வாங்கிய கேக் ஊசி போயிருந்ததால் , அதனை சாப்பிட்டவர்களுக்கு என்னவாகுமோ என்ற பதற்றத்தில் ஆதிராஸ் கேக் ஷாப் உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்த காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடி மாவட்டம் பொட்டல்காடு பகுதியை சேர்ந்தவர் இசக்கிராஜா, இவருக்கு திங்கட்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக , தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள ஆதிராஸ் கேக் ஷாப்பில் 450 ரூபாய்க்கு கேக் வாங்கி சென்றுள்ளார். அதனை உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து சிலர் சாப்பிட்ட நிலையில் கிரீம் கேக்கின் உட்பகுதி ஊசிபோய் பூஞ்சை பிடித்து இருந்ததை கண்டு சாப்பிட்டவர்கள் வாந்தி எடுத்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஊசிபோன கேக்கை விற்ற ஆதிராஸ் கேக் ஷாப்பிற்கு நண்பர்களுடன் வந்து இசக்கிராஜா நியாயம் கேட்டார்

தாங்கள் 2 தினங்களுக்கு மேலான கேக்கை விற்பனைக்கு வைப்பதில்லை என்று மறுப்பு தெரிவித்த, கடை உரிமையாளர் எதற்கும் அசைந்து கொடுக்க வில்லை, ஆனால் அங்கிருந்த மற்ற கேக்குகளை மட்டும் அவசர அவசரமாக எடுத்து உள்ளே கொண்டு போனதாக கூறப்படுகின்றது

இதையடுத்து கெட்டுபோன கேக் விற்பனை குறித்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் 2 மணி நேரமாக அதிகாரிகள் வருவார்கள் என்று காத்திருந்தும் அந்த ஒரு அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் உணவுபொருள் பாதுகாப்பு அதிகாரிகள் விழித்துக் கொண்டு ,சோதனை நடத்த வேண்டும் என செய்தி வெளியான நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து 8 கிலோ கெட்டுப்போன கேக்குகள் 5 கிலோ தரமற்ற நெய் உள்ளிவற்றை பறிமுதல் செய்து ஆதிராஸ் கேக் ஷாப்பை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.

அதே போல மயிலாடுதுறை மணிக்கூண்டு அருகே உள்ள மாயாவரம் அய்யங்கார் பேக்கரியில் ஷோபனா என்பவர் பிறந்த நாள் கிரீம் கேக் வாங்கி வெட்டியபோது, கேக்கின் உள்பகுதி ஊசிப்போய் புளுக்கள் நெழிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்

அந்த கேக்கை யாரும் சாப்பிடுவதற்கு முன்னரே பார்த்ததால் , அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு விரைந்த உணவு பொருள் பாதுகாப்புத்துறையினர் அங்கு வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன பொருட்களை கைப்பற்றி அழித்தனர்

கூடுமானவரை குழந்தைகளுக்கு ரசாயண வண்ணங்கள் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம் கேக் வகைகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments