தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!
சங்ககிரி அருகே லாரியை முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியில் அதிவேகத்தில் இயக்கப்பட்ட தனியார் பேருந்து மோதி சாலையோரம் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த கோவில் ஊழியர் பரிதாபமாக பலியானார், விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுனரும் நடத்துனரும் தப்பிச்செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது
கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பேருந்தை ஓட்டிவந்து, ஒரு உயிரை பேருந்து ஏற்றி கொன்று விட்டு மனிதாபிமானமே இல்லாமல் தனியார் பேருந்து நடத்துனரும் ஓட்டுனரும் தப்பி ஓடும் காட்சிகள் தான் இவை..!
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் குமரசேன் . 42 வயதான இவர் பவானி கூடுதுறை பகுதியிலுள்ள கோயிலில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இரு சக்கரவாகனத்தில் பவானியிலிருந்து மகுடஞ்சாவடிக்கு சென்ற போது, வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்ற எஸ்.என்.பி என்ற தனியார் பேருந்து , குமரேசனின் பின் பக்கம் வந்து அதிவேகத்தில் மோதியது
இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தின் நடத்துனரும், ஓட்டுனர் சுதாகரும் அடுத்தடுத்து பேருந்தில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். சாலையில் சென்ற இரு சக்கரவாகனத்தில் லிப்ட் கேட்டு அதில் ஏறி தப்பிச்சென்றனர்
இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் குமரேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் உள்ள காட்சிகளை கைப்பற்றிய சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓட்டிய ஓட்டுனர் சுதாகரை கைது செய்தனர். முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது பேருந்தை கட்டுப்படுத்த இயலாமல் விபத்து நிகழ்ந்து விட்டதாக அவர் தெரிவித்தர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை போலீசார் ஜாமீனில் விடுவித்ததாக கூறப்படுகின்றது.
முழுக்க முழுக்க அதிவேகத்தில் பேருந்தை ஓட்டிவந்ததோடு, சரியான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றவர் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்திய ஓட்டுனரை ஜாமீனில் விடுவித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Comments