புற்று நோய் மாத்திரைக்கு பதில் ரத்த அழுத்த நோய் மாத்திரை.. கை,கால்கள் செயல் இழந்த விபரீதம்..! அரசு ஆரம்ப சுகாதார நிலைய கவனக்குறைவு

0 2403

தேனி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்று நோய் மாத்திரையுடன் தவறுதலாக ரத்த அழுத்த நோய்க்கு உரிய  மாத்திரையும் வழங்கியதால் தனது அண்ணனின் கைகால்கள் செயல் இழந்துவிட்டதாக கூறி பெண் ஒருவர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், பரிசோதிக்க வந்த  அரசு மருத்துவ குழுவினர் , பெண்ணின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாமல் திரும்பிச்சென்றனர்

மாத்திரையை மாற்றிக் கொடுத்ததால் தனது அண்ணன் கைகால்கள் செயல் இழந்துவிட்டதாக, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீது குற்றஞ்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பெண்ணின் ஆதங்க வார்த்தைகள் தான் இவை..!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேர் ஆட்டோவில் வந்த இரு பெண்கள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கத்திருந்தனர். ஆட்டோவுக்குள் பூதிபுரத்தை சேர்ந்த ராம்ராஜ் என்பவர் கைகால் அசைவின்றி சுய நினைவில்லாமல் படுத்திருந்தார். அவருடன் மனைவி ஆதிபராசக்தியும், சகோதரி மகேஸ்வரியும் வந்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியரை சந்தித்த மகேஸ்வரி, தனது சகோதரர் ராஜாராமுக்கு பூதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட தவறான மருந்தால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரித்தார்.

தனது சகோதரர் கட்டிட வேலை செய்துவந்ததாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணப்படுத்திய நிலையில், கடந்த ஜூன் மாதம் மீண்டும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மதுரை மருத்துவமனையில் புற்று நோய்கட்டி அகற்றப்பட்டதாகவும், தொடர்ந்து மாத்திரை வாங்கி கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.

புற்று நோய்க்குரிய மாத்திரை தீர்ந்து போனதால், அண்மையில் பூதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தனது அண்ணி மாத்திரை வாங்கியதாகவும், அங்குள்ளவர்கள் புற்று நோய் மாத்திரையுடன் ரத்த அழுத்த நோய்க்குரிய மாத்திரையையும் சேர்த்து கொடுத்ததால் அதனை தனது அண்ணன் தொடர்ந்து சாப்பிட்டதால் கைகால்கள் செயல் இழந்து சுய நினைவின்றி கிடப்பதாகவும், மெத்தனமாக மாத்திரையை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதுடன் தனது சகோதரரை குறைந்த பட்சம் எழுந்து அமர்ந்து தானாக சாப்பிடும் வகையில் உடல் நலம் தேறுவதற்காவது உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்

ஆட்டோவில் படுத்திருந்த ராஜாராமை, காணவந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் , மகேஸ்வரியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் விழித்தனர். ஒரு கட்டத்தில் விட்டால் போதும் என்று சுகாதாரத்துறையினர் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்

மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது , அந்த மாத்திரை சரியானது தானா என்பதை மருந்துச்சீட்டுடன் ஒப்பிட்டு உறுதி படுத்திக் கொள்வது இது போன்ற சம்பாவிதங்களை தவிர்க்க உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments