பஸ் ஸ்டாப்ப வையி.. பணத்தை பேரம் பேசி அள்ளு விழிபிதுங்கும் அதிகாரிகள்..! யாருப்பா அந்த மேல்மட்டம் ?
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி புதுநகரில் முக்கிய சாலையில் உள்ள காலி நிலங்களின் முன்பு பேருந்து நிழற்குடைகளை வைத்து, நில உரிமையாளர்களிடம் பேரம் பேசி பணம் கறப்பதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மழைநீர் வடிகாலை காரணம் காட்டி நடந்து வரும் முறைகேடுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை மணலி புது நகரில் இரவோடு இரவாக பேருந்து நிறுத்தம் பிடுங்கி எடுக்கப்படும் காட்சிகள் தான் இவை..!
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி புது நகர் 16 வது வார்டில் திருவள்ளுவர் சிலைக்கு எதிர்புறம் காலி நிலத்தின் முன்பு பெரிய மரத்தையொட்டி நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த பயணிகள் நிழற்குடையை அகற்ற நிலத்தின் உரிமையாளர் 2019 ஆம் ஆண்டு மாநகராட்சியில் கோரிக்கை மனு அளித்த போது, 2 லட்சம் ரூபாய்க்கு DD எடுத்து மாநகராட்சியில் கட்டினால் அகற்றித் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்
அந்த காலி நிலம் வேறு ஒருவரின் பெயருக்கு மாறிய நிலையில், எந்த ஒரு அதிகாரிகளின் அனுமதியும் இல்லாமல், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவோடு இரவாக அங்கு மழைநீர் வடிகால் பணி மேற்கொள்ள இருப்பதாக கூறி 16 வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் முன்னிலையில் பேருந்து நிழற்குடை பிடுங்கி எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பால் மீண்டும் அதே இடத்தில் பேருந்து நிழற்குடை நடப்பட்டது. ஒரு மாதத்திற்கு முன்பு மழை நீர் வடிகால் அமைத்த போது மீண்டும் அந்த பேருந்து நிழற்குடையை அகற்றிய அதிகாரிகள் அந்த நிழற்குடையை அங்கே நடாமல் காலம் தாழ்த்தி வந்தனர். அந்த பெரிய மரத்தையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதால் குடியிருபோர் நலச்சங்கத்தினர் நிழற்குடையை மீண்டும் அதே இடத்தில் வைக்க அழுத்தம் கொடுத்தனர்.
இதையடுத்து அந்த காலி நிலத்தின் முன்பு செங்கற்கள் இறக்கப்பட்டதோடு, சனிக்கிழமை அதிகாலை பயணிகள் நிழற்குடையை 15 மீட்டர் தள்ளி மற்றொரு காலி நிலத்தின் முன்பு அதிகாரிகள் நட்டு உள்ளனர். மரத்தைவிட்டு பேருந்து நிழற்குடையை பிரித்ததால் எதிர்ப்பு கிளம்பியது.
நிழற்குடை இருக்கும் போது சதுர அடி 2,500 ரூபாய்க்கு விலை பேசப்பட்ட அந்த காலி நிலம் அகற்றப்பட்ட பின்னர் தற்போது சதுரஅடி 6,000 ரூபாய்க்கு விலை பேசப்பட்டிருப்பதாகவும், முன்பு 30 லட்சம் ரூபாயாக இருந்த அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 72 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிழற்குடையை அகற்றியதால் பல லட்சங்கள் கைமாறியதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து செயற்பொறியாளர் சீனிவாசனிடம் கேட்ட போது, பேருந்து நிழற்குடை தள்ளி நடப்பட்டதை ஒப்புக் கொண்ட அவர், மேல்மட்டத்தில் உள்ளவர்களின் தலையீடு என்றும் தன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றும் தெரிவித்தார்
பேருந்து நிறுத்தத்தை இடம்மாற்றியது குறித்து மாநகராட்சியின் வடக்கு பகுதி துணை ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் புகார் தெரிவித்த போது, அந்த பேருந்து நிழற்குடை பழைய இடத்தில் மீண்டும் நடப்படும் என்று உறுதி அளித்தார். அதே போல மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்படும் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் மண் லாரி, லாரியாக கண்டெய்னர் யார்டுகளுக்கு கொண்டு விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
Comments